Karthik Raja: ‘நாங்க நிச்சயம் இசைக் குடும்பம் இல்லை’ கார்த்திக்ராஜா ஓப்பன் டாக்!
Jan 25, 2023, 06:00 AM IST
அப்பா இசையமைப்பாளராக இருக்கிறார் என்பதற்காக , நான் இந்த பணிக்கு வரும் போது எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. வரவேற்பு தான் இருந்தது. அப்பா மீது இருந்த அன்பு, எங்கள் மீதும் பொங்கியது. அதை ரொம்ப மதிக்கிறேன்
இசைஞானியின் தலை வாரிசு, மெலோடிகளின் காதலன், மெல்லிசையின் நாயகன் கார்த்திக் ராஜா. இன்றைய தலைமுறைக்கு இவரை கொஞ்சம் அறிந்திருக்க வாய்ப்பில்லை தான். ஆனால், 90களில் இருந்தவர்களுக்கு கார்த்திக் ராஜாவின் ப்ளே லிஸ்ட், அன்றும், இன்றும், என்றும் ஃபேவரிட் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். அவர் இசையமைத்த பாடல்கள் பல, ஏ.ஆர்.ரஹ்மான் இசை என கடந்து போனவர்களும் உண்டு. இசைஞானி வீட்டிலிருந்து வந்த நவீன இசைக்கருவி கார்த்திக் ராஜா, பல ஆண்டுகளுக்குப் பின் பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருக்கிறார். இதுவரை பேசாத பல விசயங்களை அவர் பேசியிருக்கிறார். இதோ அந்த பேட்டி:
‘‘என்னுடைய 30 ஆண்டு கலைப்பயணம், எனக்கு ரொம்ப விருப்பமாக இருந்தது. நிறைய அனுபவம் இருந்தது. நல்ல நல்ல வாய்ப்புகள் கிடைத்தது. இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருந்ததில்லை. மியூசிக் தான் வாழ்க்கையாக இருந்தது.
பியானோ கத்துட்டு இருந்தேன், பாட்டு கத்துட்டு இருந்தேன், மற்றபடி இசையமைப்பாளர் ஆகும் எண்ணம் இருந்ததில்லை. அது தற்செயலாக தான் நடந்தது. அதற்காக எந்த திட்டமும் போடவில்லை. அதுவா அந்த வழியில் இழுத்துச் சென்று விட்டது. ஆனால், அது ஆர்வமாக இருந்தது. தற்செயலாக நடப்பது தான் சுவாரஸ்யமாக இருக்கும்.
ஒரு நாள் அப்பா சொன்னார், ‘இந்த பாடலுக்கு மியூசிக் பண்ணு’ என்று, பஞ்சு சார் அந்த பாடலை எழுதினார். அந்த பாடல் ஹிட். திடீர்னு பஞ்சு சார் ஒரு ஸ்டேஜ்ல அறிவிக்கிறாரு, ‘இவர் தான், கார்த்திக் ராஜா, இவர் தான் பாண்டியனின் ராஜ்ஜியத்தில் பாடலை கம்போஸ் செய்தார்’ என்று. அவர் தான் அறிமுகம் செய்துவிட்டார்.
அப்பாவுக்கு எப்போதும் கீ போர்டு வாசிப்பேன். நான் கம்போஸ் செய்த பாடல்களை, அப்பாவுக்கு இடைவேளையின் போது போட்டு காட்டுவேன். அப்படி ஒரு மியூசிக், அப்பாவுக்கு பிடித்து போய், அவர் கம்போசிங் செய்ய சொன்னது தான், ‘பாண்டியனின் ராஜ்ஜியத்தில்’ பாடல்.
உல்லாசம் படத்தில், கொஞ்சும் மஞ்சள் பூக்கள் என்ற பாடல் இருக்கும். நான் அதற்கு வேறு மாதிரி ட்யூன் ஏற்பாடு செய்திருந்தேன். இயக்குனருடன் அந்த பாடல் ரெக்கார்டிங்கிற்கு போய் கொண்டிருந்த போது, ஒரு கேசட்டை ப்ளே செய்து, இந்த மாதிரி பண்ணலாம்னு தான் நெனச்சேன் என்றார் இயக்குனர்.
‘இதை முன்னாடியே சொல்லிருக்கலாமே,’ என்று அவரிடம் கூறி, ரெக்கார்டிங் கேன்சல் செய்துவிட்டு, மறுபடியும் அவர் டேஸ்டிற்கு பண்ணது தான், இப்போது நீங்கள் கேட்கும் கொஞ்சும் மஞ்சள் பாடல்.
நான் கம்போசிங் செய்வது எப்போதும் ஹைஃபிச்சில் இருக்கும். முத்து முத்தம்மா பாடலுக்கு அப்படி ஒரு குரல் தேவைப்பட்டது. கமல் சார் சரியாக இருப்பார் என்பதால், ‘அங்கிள் வர்றீங்களா?’ என்று கேட்டேன். கமல் சார் உடனே வருவதாக சொன்னார். எங்கள் வீட்டில் வைத்து தான் அந்த பாடலை ரெக்கார்டிங் செய்தோம்.
பாடல் கம்போசிங் செய்யும் போது நன்றாக செய்ய வேண்டும் என்கிற எண்ணம் தான் என்னிடம் இருக்குமே தவிர, ஹிட் ஆக்கணும் என்ற எண்ணம் வைத்தது இல்லை. சிங்கீதம் சீனிவாசராவ் காதலா காதலா படத்திற்காக அழைத்தார். நாளை ஷூட்டிங், இன்று பாடல் வேண்டும் என்று கூறினார். ‘சார்… இன்றைக்கு ஸ்டூடியோ கூட இல்லை சார்’ என்று கூறினேன்.
‘எத்தனை மணிக்கு உங்க ஸ்டூடியோ ப்ரீ ஆகும்னு’ கேட்டார். ‘6 மணிக்கு மேலே தான் சார் முடியும்’ என்றேன். அவரும் 6 மணிக்கு மேலே ஸ்டார்ட் பண்ணலாமா என்று கேட்டார். அதற்கு மேல் தொடங்கி, இரவு முழுக்க இசைக்கலைஞர்களை உட்கார வைத்து, விடிய விடிய ரெக்கார்டு செய்தோம். ‘காசு மேலே… காசு வந்து’ பாடல் அப்படி தான் உருவானது.
இயக்குனர்கள் பார்வைக்கு தான் நாம் இசையமைக்க வேண்டும். அவர்கள் நம்மை நம்பி, படைப்பை ஒப்படைக்கும் போது, நம்மால் அதற்கு எவ்வளவு செய்யமுடியுமோ, அதை நாம் செய்ய வேண்டும். செல்லமே செல்லம் பாடல் கம்போஸ் செய்யும் போது, எனக்கு திருமணம் ஆகியிருந்தது. என் மனைவிக்காக தான் அந்த பாடலை கம்போஸிங் செய்தேன். அது ஹிட்டும் ஆகிவிட்டது.
நாங்கள் இசை குடும்பம் இல்லை. எங்க அப்பா மட்டும் தான் இசை, நாங்கள் வெறும் குடும்பம் தான். உண்மை அது தான். அப்பா இசையமைப்பாளராக இருக்கிறார் என்பதற்காக , நான் இந்த பணிக்கு வரும் போது எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. வரவேற்பு தான் இருந்தது. அப்பா மீது இருந்த அன்பு, எங்கள் மீதும் பொங்கியது. அதை ரொம்ப மதிக்கிறேன்,’’
என்று அந்த பேட்டியில் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா கூறியுள்ளார்.
டாபிக்ஸ்