ஹைதராபாத்தில் வாரணாசியை உருவாக்கி வரும் ராஜமௌலி.. அடுத்த பிரம்மாண்டத்தை தயார் செய்யும் படக்குழு..
Published Jun 17, 2025 05:35 PM IST

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் அடுத்த படத்தின் முக்கிய காட்சிகளுக்காக ஹைதராபாத்தில் சுமார் 50 கோடி ரூபாய் செலவில் வாரணாசி செட் அமைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரமாண்டமான திரைப்படங்களை உருவாக்குவதில் வல்லவராக அறியப்படும் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, அவரது வரவிருக்கும் படத்திலும் பிரம்மாண்டத்தை ஒரு படி மேலே கொண்டு செல்ல இலக்கு வைத்துள்ளார். இதுகுறித்த பேச்சுகள் தான் தற்போது சினிமா வட்டாரத்தில் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.
SSMB29
தற்போது மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா ஜோனஸ், பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் ராஜமௌலி ஒரு படம் இயக்கி வருகிறார். எஸ்எஸ்எம்பி 29 என்ற தற்காலிக தலைப்பில் இந்த படம் தயாராகி வருகிறது. ஏற்கனவே இரண்டு முக்கிய ஷெட்யூல்களை முடித்துள்ள இந்த படத்தின் புதிய ஷெட்யூல் விரைவில் கென்யாவில் தொடங்க உள்ளது.
ஹைதராபாத்தில் செட்
ஹைதராபாத்தில் செட் ராஜமௌலி, மகேஷ் பாபு படத்தின் ஒரு முக்கிய காட்சி வாரணாசியில் நடப்பதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உண்மையான இடத்தில் படமாக்குவது கடினம் என்பதால், ராமோஜி ஃபிலிம் சிட்டியில் வாரணாசியின் முக்கிய பகுதியை உருவாக்க ராஜமௌலி தனது குழுவிடம் கேட்டுக் கொண்டாராம்.
50 கோடி செலவில் வாரணாசி
செட் வேலைகள் கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் உள்ளன. ஏற்கனவே இந்த பிரமாண்ட செட் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளன. வாரணாசி செட்டுக்காக சுமார் ரூ.50 கோடி செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பிரம்மாண்ட செட்டிற்கான வேலை பார்த்து பார்த்து செய்து வருகின்றனராம்.
ராமோஜி ஃபிலிம் சிட்டி
ராஜமௌலி எவ்வளவு பெர்ஃபெக்ட்டாக இருப்பார் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் செட் விஷயத்தில் அவரது குழு ஒவ்வொரு அளவையும் சரியாக எடுத்து செய்கிறது. செட் விஷயத்தில் ஏதேனும் தவறு நடந்தால் ராஜமௌலி சும்மா இருக்க மாட்டார். அவர் எதிலும் சமரசம் செய்து கொள்ள மாட்டார். அதனால் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் இந்த வாரணாசி செட் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
பிரமாண்ட ஆக்ஷன் சீக்வென்ஸ்
இந்த வாரணாசி செட்டில் சில முக்கியமான காட்சிகள் மற்றும் கதாநாயகன் மகேஷ் பாபு மீது பிரமாண்ட ஆக்ஷன் சீக்வென்ஸ் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜமௌலியின் முந்தைய படங்களைப் போலவே, கிரீன் மேட் பின்னணியில் பிரமாண்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. ஹாலிவுட்டைச் சேர்ந்த சில முன்னணி விஎஃப்எக்ஸ் நிறுவனங்கள் இந்த படத்தின் கிராஃபிக்ஸ் பணிகளில் ஈடுபட்டுள்ளன, இதற்காக கோடிக்கணக்கில் ரூபாய் செலவு செய்யப்படுகிறது.
மகேஷ் பாபுவின் கதாப்பாத்திரம்
இந்த பிரமாண்ட பட்ஜெட் ஆக்ஷன் டிராமா படம் ராமாயணத்துடன் தொடர்புடையது. மகேஷ் பாபுவின் கதாபாத்திரம் உலகம் முழுவதும் ஒரு சிறப்புவாய்ந்த மருத்துவ மூலிகைகள், வேர்கள் தேடுவதாக இருக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளன. புராணக் கோணமும் இந்த படத்தில் ஒரு பகுதியாக இருப்பதால், இன்னும் பெயரிடப்படாத இந்த திட்டம் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.