Mynaa Movie:‘சீரியலை விட கேவலமா பார்த்தாங்க’ மைனா அனுபவம் பகிர்ந்த பிரபு சாலமன்!
Dec 29, 2022, 06:24 AM IST
Mynaa Movie Director Prabu Solomon Interview: ‘ட்ராலி எடுக்கக் கூட காசு இல்லை. ஸ்டடி கேம் எடுக்க காசு இல்லை. ஒரு நாளைக்கு 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ரூபாய் தான் செலவுக்கு வச்சிருப்போம். ஆனால், நல்ல கதை கையில் இருந்தது’ -பிரபுசாலமன்
இயற்கையோடு ஒன்றிய திரைக்கதையின் நாயகன் இயக்குனர் பிரபு சாலமன். மைனா, கும்கி உள்ளிட்ட மெகாஹிட் படங்களை கொடுத்த பிரபுசாலமனுக்கு, பெரிய பெயர் பெற்றுத்தந்தது மைனா திரைப்படம். மைனா படம் எப்படி உருவானது, அதன் பின்னணியில் நடந்த சுவாரஸ்யங்களை பகிர்ந்துள்ளார் பிரபு சாலமன். இணையதளம் ஒன்றுக்கு முன்பு அவர் அளித்த பேட்டி இதோ:
‘‘ நான் ஆத்மார்த்தமா பண்ண படம் மைனா தான். காரணம் அது என்னுடைய தயாரிப்பில் உருவான படம். என்னை கேள்வி கேட்க யாருமே இல்லை. அதுக்கு முன்னாடி நான் பண்ண கொக்கி, லீ படங்கள் நான் இன்னொரு தயாரிப்பாளரை சார்ந்து இருந்தேன்.
அவங்க சூழலை நினைத்து, கொஞ்சம் காம்ரமைஸ் பண்ணிப்பேன். அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்லாமல் பண்ண படம் மைனா தான். இத்தனைக்கும் என்னிடம் வேறும் கேமரா மட்டும் தான் இருந்தது. வேறு யாருமே இல்லை. லைட் எடுப்பதற்கு கூட காசு இல்லை.
ட்ராக் அன் ட்ராலி எடுக்கக் கூட காசு இல்லை. ஸ்டடி கேம் எடுக்க காசு இல்லை. ஒரு நாளைக்கு 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ரூபாய் தான் செலவுக்கு வச்சிருப்போம். ஆனால், நல்ல கதை கையில் இருந்தது. கேமரா இருக்கு, கதை இருக்கு, நல்லா நடிக்கத் தெரிந்த நாலு பேர் அப்புறம் கிடைத்தார்கள்.
விதார்த் என் கூட ஆரம்பத்திலிருந்து சைடு ரோல் பண்ண பையன். ‘வாடா… வந்து நடி, நீதான் ஹீரோ’ என்றேன். அவன் நம்பவே இல்லை. அப்புறம் அமலாபாலை அறிமுகமாக அழைத்து வந்தேன். வடிவேலு உடன் சின்ன சின்ன ரோலில் நடித்துக் கொண்டிருந்த தம்பி ராமையா சாரை அழைத்துவந்தேன். இப்படி தான் ஆட்களை சேர்த்தேன்.
மொத்தமே ஒரு 15 பேர் தான். டூர் போற மாதிரி தான், ஷூட்டிங் போனோம். டிவி சீரியல் அளவுக்கு கூட எங்களை பார்க்க மாட்டாங்க. டிவி சீரியலுக்கு கூட 70 பேர் இருப்பாங்க. ‘யாரு இவனுங்க, குரங்கனியில் வந்து ஷூட் பண்றானுங்க, குறும்படத்தை விட மோசமா எடுத்துட்டு இருக்காங்க’ என்று தான் எல்லாரும் பார்த்தாங்க. அப்படி தான் எல்லாரும் பார்த்தாங்க.
ஆனால், படம் முடிக்கும் போது, 2 கோடியை தாண்டி வந்துவிட்டது பட்ஜெட். பாக்ஸ் ஆபிஸில் 15 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. அதுல எனக்கு கிடைத்த சுதந்திரம் இருக்கே… ஆனால், ஒரு புறம் கஷ்டமாக இருக்கும். யார் யாருக்கோ போன் செய்து ஒரு லட்சம், ஒரு லட்சமாக கடன் வாங்கிட்டு இருப்பேன். தவனை தேதி வந்ததும், அனைவரும் கூப்பிடுவார்கள்.
படம் எடுத்த சந்தோசத்தில் அவர்களை சமாளிப்பேன். எனக்கு மைனா கதை தான் தெம்பு கொடுத்தது. அப்படி ஒரு படத்தை எடுப்பது தான் சவால். எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு படம் எடுப்பது இல்லை இயக்குனர் வேலை,’’
என்று பிரபு சாலமன் கூறினார்.
டாபிக்ஸ்