Muktha Srinivasan: நாகேஷுக்கு முகவரி கொடுத்தவர் - மணிரத்னத்தின் திருப்புமுனை முக்தா சீனிவாசன்..!
May 29, 2023, 05:30 AM IST
இயக்குநர் முக்தா சீனிவாசன் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
எத்தனையோ ஜாம்பவான்களைத் தமிழ் சினிமா கண்டிருக்கிறது. ஆனால் ஒரு சிலர் மட்டுமே வரலாறு படைத்து விட்டுச் செல்கின்றனர். இப்படிப்பட்ட இயக்குநர்களில் ஒருவர் தான் முத்தா சீனிவாசன். தமிழ்த் திரைப்படம் பல்வேறு கலைஞர்களின் உழைப்பை ஒருங்கிணைத்து உருவாவதாகும்.
அப்படி அனைத்து கலைஞர்களையும் ஒருங்கிணைத்து வேலை வாங்கக் கூடியவர் இயக்குநர். அதில் வெற்றி கண்டு, திரைப்படத்திலும் வெற்றி கண்டு, தயாரிப்பாளராகவும் வெற்றி கண்டவர் இவர்.
கும்பகோணத்தில் பிறந்த இவர் சிறுவயதிலேயே வறுமையின் பிடியில் சிக்கியவர். படித்து தன்னை உயர்த்திக் கொண்ட சீனிவாசன், சுருக்கெழுத்து, தட்டச்சு உள்ளிட்டவற்றைக் கற்றுக் கொண்டார். இளம் வயதில் சேலம் கருவூல அலுவலகத்தில் கணக்கராக பணியாற்றிய இவர், பின்னர் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் கிளை அலுவலகத்தில் தட்டச்சராக பணியாற்றினார்.
அதன் மூலம் திரைத்துறைக்குப் பயணம் செய்த இவர். க்ளாப் பாயாக சினிமாவில் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து வசன ஆசிரியராக உயர்ந்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்படங்களில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய இவர், உதவி இயக்குநராக மாறினார்.
பின்னர் மாடல் தியேட்டரில் இருந்து வெளியேறிப் பல நிறுவனங்களில் பணியாற்றினார். பின்னர் இயக்குநர் எஸ்.பாலச்சந்திரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி தன்னுடைய முதல் படமான முதலாளியை இயக்கினார்.
1961 ஆம் ஆண்டு தனது சகோதரரான ராமசாமியுடன் இணைந்து முக்தா பிலிம்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். அதற்குப் பிறகு சீனிவாசனாக இருந்த இவர் முக்தா சீனிவாசன் என அழைக்கப்பட்டார்.
தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், முத்துராமன்,ஜெயலலிதா, கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரை இவர் இயக்கியுள்ளார். நகைச்சுவை ஜாம்பவானான நடிகர் நாகேஷை திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.
தற்போது தமிழ் சினிமாவில் வெற்றிவாகை சூடி இருக்கக்கூடிய பல இயக்குநர்களுக்கு மணிரத்னம் இயக்கிய நாயகன் திரைப்படம் தான் முன்னுதாரணம். அப்படிப்பட்ட வரலாற்றுக் காவியமான இந்த திரைப்படத்தைத் தயாரித்தவர் முக்தா சீனிவாசன்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கக்கூடிய ரஜினிகாந்த்க்கு மிகப்பெரிய திருப்பம் கொடுத்த திரைப்படம் பொல்லாதவன். அந்த படத்தைத் தயாரித்து இயக்கியவர் இவர் தான். சில படங்களை இவர் தான் இயற்றினார் என்றால் பலரும் நம்ப மாட்டார்கள்.
சினிமா பைத்தியம், பூஜைக்கு வந்த மலர், பொம்மலாட்டம், தவப்புதல்வன், சூரியகாந்தி, அந்தரங்கம், அந்தமான் காதலி, அவன் அவள் அது, பொல்லாதவன், சிம்லா ஸ்பெஷல், இரு மேதைகள், வாய்க்கொழுப்பு உட்பட 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார்.
அதேபோல் இவர் 350க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், மூன்று நாவல்களும் எழுதியுள்ளார். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்ட தனிநபர் நூலகத்தை தன் இல்லத்தில் இவர் வைத்திருந்தார்.
திருக்குடந்தை பதிப்பகம் என்ற பதிப்பு நிறுவனத்தை உருவாக்கிப் பல புத்தகங்களை இவர் வெளியிட்டுள்ளார். தனது வாழ்க்கை வரலாற்றை ஒரு ஏழை ஏறி வந்த ஏணி என்ற தலைப்பில் இவரே எழுதி அதை வெளியிட்டார்.
இப்படிப்பட்ட ஆகச் சிறந்த கலைஞன் இன்றுடன் மறைந்து 5 ஆண்டுகள் ஆகும். ஒரு மனிதனின் விட்டுப் போகாத சொத்து என்னவென்றால் கல்விதான். அதேபோலக் காவியத்தின் மூலமாகவும், நூல்களின் மூலமாகவும் இன்றும் இந்த சிறந்த கலைஞன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று கூறினால் அது மிகையாகாது.
டாபிக்ஸ்