ஏற்கனவே திருமணமான பெண்ணுக்காக காத்திருக்கும் பாரதிராஜா.. காதல் படுத்தும் பாடு.. ரசிக்கும் மக்கள்..
Oct 12, 2024, 04:41 PM IST
இயக்குநர் பாரதிராஜா தன் முதல் காதல் குறித்தும், தான் காதலித்த பெண்ணுக்காக தற்போது வரை காத்திருப்பது குறித்தும் மிகவும் நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.
என் இனிய தமிழ் மக்களே.. என ஒற்றை வாக்கியத்தை சொன்னாலே போதும், மொத்த கோலிவுட்டும் தமிழ்நாடும் பாரதிராஜாவின் பேர் சொல்லும். தமிழ்நாட்டில் கொடிகட்டி பறந்த பல படங்களையும், பல நாயகர்களையும், நாயகிகளையும் அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா.
காதலும், மக்கள் மனமும், துள்ளல் இசையும், பாடலுமாக தமிழ் மக்களை ரசிக்க ரசிக்க காதலிக்க வைத்த பெருமை பாரதிராஜாவுக்கு உண்டு. இவரும் இளையராஜாவும் சேர்ந்தால் போதும், இந்த படம் பட்டிதொட்டி எங்கும் பறந்து போய், மக்கள் மனதை தேடி ஒட்டிக் கொள்ளும் என்ற நம்பிக்கை சினிமா தயாரிப்பாளர்களுக்கு இருந்தது.
முதல் காதல்
அந்த நம்பிக்கையை அவர் கடைசிவரை காப்பாற்றியும் வருகிறார். அப்படி இருப்பவர் வாழ்க்கையில் காதல் எப்படி இருந்தது? அது அவரை என்னெல்லாம் செய்தது என்பதை விகடன் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பார்.
அந்தப் பேட்டியில் இயக்குநரும் நடிகருமான கௌதம் மேனனுடன் தன் முதல் காதலையும், அது நிறைவேறாமல் போன வேதனையையும், இப்போதும் அது தன்னிடம் செய்யும் சேட்டையையும் அழகுற கூறியிருப்பார்.
காதலியை கண்டுபிடித்த தருணம்
பள்ளி காலம் முதலே நான் ஒரு பெண்ணை காதலித்தேன். ஆனால் சில காரணங்களால் சில காரணங்களால் நாங்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை. பின் பல வருடங்கள் கழித்து அந்தப் பெண்ணை பார்த்தேன். அப்போது நான் என்னுடைய சகோதரிகளோடு காரில் சென்று கொண்டிருந்தேன். அவளை பின்னால் இருந்து பார்க்கும் போதே அது அவர் தான் எனக் கண்டுபிடித்துவிட்டேன்.
உடனே நான் காரை நிறுத்தச் சொன்னேன். இதனால், என்னுடைய சகோதரிகள் எல்லாம் எனக்கு என்னமோ ஆகிவிட்டது என பயந்தார்கள். ஆனால் எனக்கோ நான் பார்த்த பெண், நான் காதலித்தவளாக இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டே அவர் நின்றிருந்த பூக்கடைக்கு சென்றேன். அங்கு பார்த்தால் நான் காதலித்த அதே பெண்தான். அவரின் தலைமுடி எல்லாம் வெள்ளை ஆகி இருந்தது. ஆனாலும் எனக்கு மனதிற்குள் அவரை பார்த்த உடன் ஒரு பூரிப்பு ஏற்பட்டது.
எனக்குள் ஏற்பட்ட பூரிப்பு
எனக்கு அவரிடம் பேசலாமா வேண்டாமா என்ற தயக்கம். ஆனால், அவரே என்னை பார்த்து பேசினார். என்னை பார்க்க என் வீட்டிற்கெல்லாம் வந்துள்ளாராம். ஆனால், நான் அங்கு இல்லை என வீட்டிலிருப்பவர்கள் கூறியதால் திரும்பி சென்றுவிட்டேன் என்றார்.
அவரின் வார்த்தைகளைக் கேட்டு எனக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. அந்த சமயத்தில் அவர் கையில் இருந்து ஒரு பத்திரிக்கையை கொடுத்து என்னுடைய பேத்தியின் கல்யாணம் வந்துவிடு என்று சொன்னார். பல வருடங்களுக்குப் பின் அவரின் குரலைக் கேட்கும் போது எனக்குள் நடந்த அத்தனையும் கனவுபோல் மாறியது. சிரிக்கவா அல்லது பேசவா என்று சொல்லத் தெரியாத மனநிலையில் இருந்தேன். பிறகு மீண்டும் அவரே கண்டிப்பாக கல்யாணத்துக்கு வருவியா என்று கேட்க, வருவேன் என்று சொல்லிவிட்டு வந்தேன்.
கிண்டலடித்த சகோதரிகள்
இதைக் கவனித்த என்னுடைய சகோதரிகள், இத்தனை வருடமாகியும், தலைமுடி நரைத்து, உடலமைப்பு மாறிய பின்னும், அதுவும் அவர் திரும்பி நிற்கும் போதுகூட அது அவர் தான் என்பதை எப்படி கண்டுபிடித்தாய் என கேள்வி கேட்டனர். அப்போது அதுதான் ஃபீலிங் காதல் என்று சொன்னேன் என்றார் பாரதிராஜா.
ஒரு கப் காஃபி
நான் பள்ளிக்கு சென்றுகொண்டிருக்கும்போது வீடு முழுவதும் அவரின் பெயரை எழுதி வைப்பேன். என் வீட்டில் உள்ளவர்கள் என்னை பைத்தியம் என்பார்கள். இப்போது வரை அந்த பைத்தியம் அப்படியே தான் இருக்கிறது. காதல் என்பது இருவரும் அது கிடைப்பதற்காக ஏங்குவதில் தான் இருக்கிறது. அது கிடைத்துவிட்டால் அன்றே முடிந்து போகும்.
எனக்கு இப்போது கூட ஆசை இருக்கிறது. அவர் வீட்டிற்கு வந்தபோது, அவர் கையால் போட்ட ஒரு கப் காஃபி குடித்தேன். அவ்வளவு தான். என் வாழ்க்கையை மொத்தமாக வாழ்ந்த அந்த திருப்தி கிடைத்தது.
திருமணத்திற்கு காத்திருக்கிறேன்
இப்போது இதை கூறினால் தவறாகக் கூட இருக்கலாம், ஆனால், அவர் இப்போது வந்தாலும் நான் அவரை திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறேன் எனக் கூறி தன் வாழ்வின் உன்னத தருணங்களை உணர்ச்சி பொங்க கூறியிருக்கிறார். இவரின் இந்தப் பேட்டி எப்போது பார்த்தாலும் அவரின் படங்கள் தரும் சுகத்தைப் போல இனிமையாகவே இருக்கிறது.
டாபிக்ஸ்