Death Anniversary of SPB : ‘பட்டத்துக்கு வேறு சிற்றரசன் யாரு? தங்கத்துக்கு வேறு மாற்று உண்டா கூறு?’ எஸ்பிபி நினைவு தினம்
Sep 25, 2023, 05:15 AM IST
Death Anniversary of SPB : பின்னர் தெலுங்கு படத்தில் அறிமுகமானார். பின்னர் கன்னடம் என தொடர்ந்து 16க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடலை பாடியுள்ளார். அவரின் தனிச்சிறப்பு, அவர் காதல் பாடல் பாடினால் அதில் காதலின் இன்பம், வலி, வேதனை என அனைத்தும் இருக்கும்.
ஸ்ரீபதி பண்டிட்ராத்யுலா பாலசுப்ரமணியம், சுருக்கமாக எஸ்.பி.பாலசுப்ரமணியம், இன்னும் சுருக்கமாக எஸ்.பி.பி. திரைப்பட பின்னணி பாடகர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், நடிகர், இசையமைப்பாளர், டிப்பிங் கலைஞர், படத்தயாரிப்பாளர் என பல்வேறு முகம் இருந்தாலும், நமக்கெல்லாம் பரிட்சயமானதும், பிடித்தமானதுமான முகம் பாடகர் என்பது தான். இந்தியாவிலேயே சிறப்பு வாய்ந்த பாடகர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட 16க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார்.
தெலுங்கில் 1966ம் ஆண்டு அறிமுகமானார். 50 ஆண்டுகளைக்கடந்து திரைப்பின்னணி பாடகராக இருந்தார். சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான தேசிய விருதை 6 முறை பல்வேறு மொழிகளுக்காக பெற்றுள்ளார். தெலுங்கு திரையுலகில் சிறந்து விளங்கியதற்காக ஆந்திராவில் 25 நந்தி விருதுகளை பெற்றுள்ளார். தமிழ் மற்றும் கன்னட திரையுலகிலும் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். 6 ஃபிலிம் பேர் விருதுகளை பெற்றுள்ளார்.
50,000க்கும் மேற்பட்ட பாடல்களை 16 மொழிகளில் பாடியுள்ளார். 1981ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி மட்டும் இவர் காலை 9 முதல் இரவு 9 மணி வரை 27 கன்னட பாடல்களை பாடி சாதனை படைத்துள்ளார். இதேபோல் ஒரு நாளில் தமிழில் 19, இந்தியில் 16 பாடல்களை பாடிய சாதனைக்கும் சொந்தக்காரர். மேலும் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் பாடும் நிலா என்று செல்லமாக அழைக்கப்படுகிறார்.
நம்மை இசை மழையில் நனைத்து வந்த எஸ்.பி.பி 2020ம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக நம்மைவிட்டு பிரிந்தார். அப்போது ஒட்டுமொத்த தமிழகமும் கதறியது. சமூக வலைதளங்கள் பெருகிவிட்ட இந்தக்காலத்தில் அவரது இறப்பின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டது என்றே கூறலாம்.
ஆந்திராவின் நெல்லூரில் தெலுங்கு பிராமிண் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை எஸ்.பி.சம்பமூர்த்தி, ஹரிகதா கலைஞர். நாடகங்களில் நடிப்பார். இவரது தாய் சகுந்தலம்மா. இவருக்கு 2 சகோதரர்கள் மற்றும் எஸ்.பி.ஷைலஜா உள்ளிட்ட 5 சகோதரிகள். இவரது மகன் எஸ்.பி.பி.சரணும் புகழ்பெற்ற பாடகர் மற்றும் திரைத்துறையில் இயங்கி வருகிறார்.
இன்ஜினியரிங் படித்தவர் என்றாலும், இவர் சிறு வயதிலேயே இசையில் ஆர்வம் கொண்டிருந்தார். அதனால் இசையும் கற்றார். ஆனால் அவருக்கு அவரது தந்தையின் கனவை நிறைவேற்றுவதுதான் லட்சியமாக இருந்தது. இன்ஜினியரிங் படித்து அரசு பணியாளர் ஆக வேண்டும் என்பதுதான் அவரது தந்தையின் ஆசை.
ஆனால் இன்ஜினியரிங் படித்தபோதே அவர் பாட்டுப்போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வென்றார். உடல்நலக்குறைவு காரணமாக இவர் படிப்பை கைவிடவேண்டிய நிலை ஏற்பட்டது. சென்னையில் இன்ஜினியர்கள் மையத்தில் சேர்ந்தார். அப்போது அவர் ஒரு பாட்டுப்போட்டியில் முதல் பரிசை வென்றார்.
இளையராஜா மற்றும் கங்கை அமரனுடன் சேர்ந்து இயங்கத்துவங்கினார். அப்போதுதான் அவருக்கு முதலில் பாட வாய்ப்பு கிடைத்த பாடல், நிலவே என்னிடம் நெருங்காதே. அந்தப்பாடலை பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடியிருந்தார்.
பின்னர் தெலுங்கு படத்தில் அறிமுகமானார். பின்னர் கன்னடம் என தொடர்ந்து 16க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடலை பாடியுள்ளார். அவரின் தனிச்சிறப்பு, அவர் காதல் பாடல் பாடினால் அதில் காதலின் இன்பம், வலி, வேதனை என அனைத்தும் இருக்கும். அவர் உற்சாகமாக ஒரு பாடலை பாடினால் நாம் எழுந்து ஆட்டம்போடும் அளவுக்கு உற்சாகம் பொங்கும்.
அவர் பாடும் சோகப்பாடல்கள் நம்மை உருக்கும் வகையில் இருக்கும். அவரின் இந்த சிறப்புதான், நம்மை இன்று வரை அவரை ரசிக்க வைக்கிறது. இவரது மனைவி சாவித்திரி, இவரது மகள் பல்லவி, மகன் சரண் என்று அழகான குடும்பமும் உள்ளது. எஸ்.பி.பியையும் அவரது புகழையும் நினைவு கூறும் வகையில், ஹெச்.டி தமிழ் அவர் குறித்த தகவல்களை பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறது.
டாபிக்ஸ்