Brinda Review: ‘மரணக் காடு.. சடலக் குவியல்.. புயலாய் மாறும் பூ’ த்ரிஷாவின் பிருந்தா திரைவிமர்சனம்!
Aug 03, 2024, 03:33 PM IST
Brinda Review: சுற்றி வளைத்து கடைசியில் சஸ்பென்ஸ் வைக்காமல், எல்லா முடிச்சுகளையும் முதல் எபிசோடிலிருந்தே பார்வையாளர்களுக்குத் தெரிவித்து, கதையை நகர்த்தியிருக்கிறார்கள். அதற்காக கதையில் விறுவிறுப்பு குறையவில்லை.
டிவி முன் உட்கார்ந்தால் அதை ஆப் செய்ய மனமில்லாமல் செய்யும் வெப்சீரிஸ் தான், வெற்றி பெற்ற ரகம். அந்த வரிசையில் வெள்ளிக்கிழமை வெளியாகி, சனி, ஞாயிறு மக்களின் மனதில் ஊஞ்சலாடப் போகும் வெப்சீரிஸ் தான் பிருந்தா. த்ரிஷா, இந்திரஜித் சுகுமாறன், ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட தென்னிந்திய பிரபலங்கள் பலரும் நடித்திருக்கும் 8 எபிசோட் கொண்ட வெப்சீரிஸ் தான் பிருந்தா.
மலையில் தொடங்கும் கதை
மலை கிராமம் ஒன்றில், மூடநம்பிக்கையாக பெண் குழந்தை ஒன்றை கடவுளுக்கு பலியிட அந்த ஊர் சாமியார் கூறுகிறார். அதற்கு தாய் மறுக்க, அந்த சிறுமியை அங்கிருந்து லாரி ஒன்றில் தப்ப வைக்கிறார் தாய். இதை அறிந்த கிராம மக்கள் கொதித்துப் போய், அந்த தாயை கழுத்தறுத்து கொலை செய்கிறார்கள். அதை தடுக்க வரும் மகனுக்கு, தாயும் இல்லாமல், தங்கையும் இறந்துவிட்டால் என்று ஊரார் மீது கோபம். மூடநம்பிகை தான் இதற்கு காரணம் என, அன்று இரவே அந்த கிராமத்தை தீயிட்டு, அனைவரையும் கொல்கிறான்.
தப்பிச் செல்லும் அந்த சிறுமி தான் த்ரிஷா. போலீஸ்காரர் ஜெயப்பிரகாஷ் வீட்டில் மூத்த மகளாக வளர்கிறாள். தந்தை இறந்து போக, போலீஸ் வேலை பார்க்கும் அவர், தாயை தவிர வேறு யாருடனும் அதிகம் பேசுவதில்லை. தன் குடும்பத்தை சேராதவர் என்பதால், த்ரிஷாவை அவரது தங்கை வெறுக்கிறர். போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., வேலை பார்த்தாலும், வங்கி பணியாளர் போல முகத்தை எந்நேரமும் வைத்திருக்கிறார் த்ரிஷா.
சூடுபிடிக்கும் க்ரைம் திரைக்கதை
திடீரென குளம் ஒன்றில் ஒரு பிரேதம் கிடக்கிறது. போலீசார் அதை தற்கொலை என்று கூற, த்ரிஷா மட்டும் அதை கொலை என்கிறார். இதனால் இன்ஸ்பெக்டரின் கோபத்திற்கு ஆளாகிறார். இருந்தாலும் சக எஸ்.ஐ., ஆன ரவீந்தர் விஜய் ஒத்துழைப்போடு, வழக்கை தனியாளாக விசாரிக்கிறார். அதே பின்னணியில் இன்னும் பல கொலைகள் நடந்தது தெரிகிறது.
முதலில் அது ஒரு சைக்கோ கொலை என்ற கோணத்தில் போய், பின்னர் அது திட்டமிட்ட தொடர் கொலை என்பது தெரிகிறது. பின்னணியில் மனநலம் பாதிக்கப்பட்டவராக காட்டப்படும் ஆனந்த் சாமி, எதற்காக இந்த கொலைகளை செய்கிறார் என்கிற தேடலுடன் நகர்கிறது அடுத்தடுத்த எபிசோடுகள். உண்மையில் ஆனந்த் சாமி ஏன் இப்படி செய்கிறார்? அவர் பின்னணியில் யார்? அதற்கான காரணம் என்ன? என்பது தான் முழு கதை.
சுற்றி வளைத்து கடைசியில் சஸ்பென்ஸ் வைக்காமல், எல்லா முடிச்சுகளையும் முதல் எபிசோடிலிருந்தே பார்வையாளர்களுக்குத் தெரிவித்து, கதையை நகர்த்தியிருக்கிறார்கள். அதற்காக கதையில் விறுவிறுப்பு குறையவில்லை. இது இதனால் நடக்கிறது, இவன் இதற்காக செய்கிறான் என்கிற தெளிவை, முன்பே பார்வையாளர்களுக்கு தந்துவிட்டார்கள்.
கடைசி 3 எபிசோடுகளில் இன்னும் கொஞ்சம்..
இதை ட்விஸ்ட் என்று பார்த்தால், த்ரிஷாவின் இளமை பருவத்திற்கும், இந்த கொலைகளுக்கும் தொடர்பு இருப்பது தான் என்பதை சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லி, ட்விஸ்ட் கொடுத்திருக்கிறார்கள். முதல் 5 எபிசோடுகள், ஆக்சிலேட்டரை காலில் இருந்து எடுக்க முடியாத அளவிற்கு, வேகமாகவும், பரபரப்பாகவும், த்ரில்லராகவும் போகிறது.
அதன் பின் வரும் 3 எபிசோடுகள், கதைக்கு ப்ரேக் போடுவதை கண் கூடாக காண முடிகிறது. கடவுள் நம்பிக்கை, மூட நம்பிக்கை என புதிய ட்ராக்கில் பயணிக்கிறது. அதை ஒரு எபிசோடில் முடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். படம் தொடங்கியது என்னமோ மலையாள சினிமா பாணியில் இருந்தது. முடிக்கும் போது, பக்கா தெலுங்கு படைப்பு என்பதை நிரூபித்துவிட்டார்கள்.
ஆனாலும், இதில் ஆறுதலான விசயம், தமிழ் டப்பிங் என்கிற சுவடே தெரியாத அளவிற்கு மேக்கிங் சிறப்பாக உள்ளது. த்ரிஷா உள்ளிட்ட பலரும் தமிழில் நன்கு அறிமுகமான பிரபலங்கள் என்பதால், வேற்று மொழி சீரியல் என்கிற ஃபீல் வரவே இல்லை. இருந்தாலும் தெலங்கான போலீஸ் சீருடை மட்டுமே வேறுபடுத்துகிறது.
தரமான இசை.. பலமான ஒளிப்பதிவு
சக்திகாந்த் கார்த்திக்கின் இசை, டைட்டில் கார்டிலும் சரி, பின்னணியிலும் சரி, தூக்கி நிறுத்துகிறது. தினேஷ் கே பாபுவின் ஒளிப்பதிவு வேறு ரகம். சூர்யா மனோஜ் வங்கலாவின் இயக்கம், ஏற்கனவே சொன்னது போல, முதல் 5 எபிசோடுகளில் மிரட்டிவிடுகிறது. ஆனாலும், அடுத்த 3 எபிசோடுகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். குறிப்பாக த்ரிஷாவின் தங்கை தொடர்பான காட்சிகளை இன்னும் குறைத்திருக்கலாம். அதனால், படத்திற்கு பெரிய பயனில்லை.
மற்றபடி, போலீஸ் அதிகாரியாக த்ரிஷா மிரட்டுகிறார். ஓடுகிறார், ஓடிக் கொண்டே இருக்கிறார். அவரோடு திரைக்கதையும் ஓடுகிறது. வார இறுதியில் த்ரில்லர் சீரிஸ் பார்க்க விரும்புவோருக்கு பிருந்தா ஒரு நல்ல விருந்து!
டாபிக்ஸ்