‘தனுஷ் சாருக்கு ரொம்ப நன்றி.. அவர்தான் கடகடவென’ - அமரன் நிகழ்வில் வெள்ளைப்புறாவை பறக்கவிட்ட சிவகார்த்திகேயன்
Nov 08, 2024, 10:16 AM IST
அமரன் பட நிகழ்வில் தனுஷிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்து இருக்கிறார். எதற்காக அவர் நன்றி சொன்னார் என்பதை பார்க்கலாம்.
சிவகார்த்திகேயன் நடிப்பில், ‘ரங்கூன்’ புகழ் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் அமரன். India's Most Fearless: True Stories of Modern Millitary புத்தகத்தில் இடம் பெற்ற மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்று அடிப்படையாகக்கொண்டு இந்தப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. கடந்த அக்டோபர் 31 ம் தேதி வெளியான இந்தப்படம் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, வசூலில் 150 கோடியை கடந்து சாதனை படைத்து இருக்கிறது.
இந்த நிலையில், இந்தப்படத்தை புரோமோட் செய்வதற்காக ஹிந்தியில் பிரபல இணையதளமான பிங்க் வில்லா யூடியூப் சேனலுக்கு அமரன் படக்குழுவினர் பேட்டிக்கொடுத்தனர். திரையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ரசிகர்களின் கேள்விகளும் இடம் பெற்று இருந்தனர்.
இந்த நிலையில், ரசிகர் ஒருவர் சிவகார்த்திகேயனிடம் அவர் நடித்த எதிர்நீச்சல் திரைப்படத்தின் ‘பூமி சுத்துதே’ பாடலில் இடம் பெற்ற ‘ஜோக்கர் இப்ப ஹீரோ ஆனேன்’ வரிகளை குறிப்பிட்டு, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எப்போது ஹீரோவாக மாறினீர்கள் என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், “ முதலில் தனுஷ் சாருக்கு இந்த இடத்தில் நான் நன்றியைக் கூறிக்கொள்கிறேன். காரணம் அவர் எழுதிய வரிகள்தான் அது. கேட்டவுடன், அவர் அதனை கடகடவென எழுதி கொடுத்தார். ரசிகர்கள் எனக்காக கத்தும் போது, முதல் நாள் முதல் காட்சியில் ஆர்ப்பரிக்கும் போது, பேட்டிகளின் போது ஆரவாரம் செய்யும் போது என ரசிகர்கள் என்னை கொண்டாடும் ஒவ்வொரு தருணங்களிலும், ஆமாம் நாம் ஹீரோவாகிவிட்டோம் என்றுதான் தோன்றும்.” என்று பேசினார்.
வசூலில் கெத்து காட்டும் அமரன்
அமரன் திரைப்படம் தீபாவளி பண்டிகை பண்டிகையன்று அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் வெளியாகும் முன்னரே ப்ரீ புக்கிங்கில் அதிக வசூலைப் பெற்ற நிலையில், வெளியான 6 நாட்களிலும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனால் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. படம் வெளியாகி 6 நாட்கள் நிறைவடைந்த நிலையில், இந்தப் படம் தமிழ்நாட்டில் மட்டும் நேற்று ரூ. 3.99 கோடி ரூபாய் வசூலைப் பெற்று இதுவரை மொத்தமாக ரூ. 92.69 கோடி வசூலைப் பெற்றுள்ளது.
இந்திய அளவில் பார்க்கும் போது படம் 8 நாட்களில் 114.51 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது. மேலும், உலகளவில் 180 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளதாக sacnilk.com இணையதளம் கூறியுள்ளது. இதன் மூலம் வார நாட்களிலும் அமரன் படம் நல்ல வசூலைப் பெற்றுள்ளது தெரிய வருகிறது.
தனுஷூக்கும் சிவகார்த்திகேயனுக்கும் என்ன பிரச்சினை?
நடிகர் தனுஷூக்கும், சிவகார்த்திகேயனுக்கும் இடையே விழுந்த விரிசல் குறித்து,பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி, ஆகாயம் தமிழ் சேனலுக்கு பேசி இருந்தார். அந்த பேட்டி இங்கே!
விசுவாசி சந்தானம்:
இது குறித்து அவர் பேசும் போது, “நடிகர் தனுஷ் 3 படத்தை எடுக்கும் பொழுது அந்தப் படத்தில், நகைச்சுவைக்கென்று ஒரு கேரக்டர் இருந்தது. அந்த கேரக்டரில் நடிக்க நடிகர் சந்தானத்தை கமிட் செய்து இருந்தார் தனுஷ். ஷூட்டிங் இரண்டு, மூன்று நாட்கள் நடந்து இருக்கும், திடீரென்று சிலம்பரசன் சந்தானத்தை அழைத்து, அந்தப் படத்தில் நடிக்கக்கூடாது. விலகி விடுங்கள் என்று சொல்லி விட்டார். விஜய் டிவியில் பணியாற்றிக் கொண்டிருந்த சந்தானத்தை சினிமாவில் அறிமுகப்படுத்தியது சிலம்பரசன்தான். அந்த விசுவாசத்திற்கான பிரதிபலனாக சந்தானம் அந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டார்.
திடீரென்று அவர் விலகிய பின்னர் தனுஷ் தற்போது அந்த கேரக்டரில் யாரை நடிக்க வைப்பது என்று யோசித்துக்கொண்டிருந்தார். அப்போது அவரும் விஜய் டிவியிலிருந்து சிலம்பரசன் சந்தானத்தை தேர்ந்தெடுத்தது போல, நாமும் ஒருவரை தேர்ந்தெடுக்கலாம் என்று முடிவெடுத்தார். அப்போதுதான் சிவகார்த்திகேயனின் பெயர் அவரது காதிற்கு வருகிறது. இந்த நிலையில் தனுஷ் தரப்பிலிருந்து சிவகார்த்திகேயனை தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்கிறார்கள். சிவகார்த்திகேயன் அப்போது மெரினா திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.
பாண்டிராஜ் சொன்ன அட்வைஸ்
இந்த நிலையில், அந்த படத்தின் இயக்குநர் பாண்டிராஜ், 3 படத்தில் கமிட்டாக வேண்டாம். ஏனென்றால், மெரினா திரைப்படத்தில் ஹீரோ வேஷம். அந்த திரைப்படத்தில் காமெடி வேஷம். அந்தப் படத்தில் நீ நடித்தால், உன்னை காமெடியனாகவே முத்திரை குத்தி விடுவார்கள். ஆகையால் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் முழு கவனத்தை செலுத்து என்று அறிவுரை கூறினார். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை. சிவகார்த்திகேயன் 3 படத்தில் கமிட் ஆகிவிட்டார். 3 படம் வெளியானது.
தியேட்டரில் சிவகார்த்திகேயன் வரும் காட்சிகளை ரசிகர்கள் கைத்தட்டி கொண்டாடினர். இதையடுத்து தனுஷ் சிவகார்த்திகேயனுக்கென்று ஒரு கூட்டம் உருவாகி கொண்டு இருக்கிறது என்பதை கரெக்ட்டாக கணித்து, அவரை வைத்து ஒரு படத்தை தயாரிக்கிறார். அந்த திரைப்படம் தான் எதிர்நீச்சல். அந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. காலப்போக்கில் நாம்தான் சிவாவை ஹீரோவாக்கி இருக்கிறோம். ஆகையால் அவர் தன் பேச்சைக் கேட்டு தன் கைக்குள் இருப்பார் என்று தனுஷ் எதிர்பார்த்தார்.
ஆனால் சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து, தனுஷை அவர் நிராகரிக்கும் இடத்திற்கு சென்று விட்டார். இன்னும் கூடுதலாக சொல்ல வேண்டுமென்றால் தனுஷின் அலுவலகத்திற்கு எதிரே, சிவகார்த்திகேயன் ஒரு அலுவலகம் வைத்து இருக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார். சினிமா அப்படித்தான் அவரை உருவாக்கியிருக்கிறது. கிட்டத்தட்ட இது அமைதிப்படை அமாவாசை கதை போலதான்” என்று பேசினார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.
டாபிக்ஸ்