வீடியோவை தூக்குங்க.. இல்லைன்னா, வழக்கு பாயும்.. தன் விவாகரத்து பற்றி தவறான தகவல் பரப்புவோருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் நோட்டீஸ்
Nov 23, 2024, 07:38 PM IST
வீடியோவை தூக்குங்க.. இல்லைன்னா, வழக்கு பாயும்.. தன் விவாகரத்து பற்றி தவறான தகவல் பரப்புவோருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தன்னுடைய விவாகரத்து தொடர்பாக உண்மைக்கு புறம்பான செய்தி மற்றும் வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் என ஏ.ஆர். ரஹ்மான் நோட்டீஸ் விட்டுள்ளார்.
சமீபத்தில் ஏ.ஆர் ரஹ்மானின் மனைவியாக இருந்த சாய்ரா பானு, ரஹ்மானை பிரிவதாகக் கூறி விவாகரத்து முடிவை அறிவித்து இருந்தார். சாய்ரா பானு, அவரது வழக்கறிஞர் மூலமாக இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில், “ ஏ. ஆர். ரஹ்மானுடன் பல வருடங்களாக மணவாழ்வில் இருந்த சாய்ரா பானு தனது கணவர் ஏ.ஆர். ரஹ்மானிடம் இருந்து பிரியும் கடினமான முடிவை எடுத்துள்ளார்.
இந்த முடிவை அவர், அவர்களது உறவில் ஏற்பட்ட ஒரு குறிப்பிட்ட பிரச்னையால் ஏற்பட்ட அழுத்தத்திற்கு பிறகு எடுத்துள்ளார். இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்த போதிலும், தம்பதிகளுக்கு இடையே நிலவிய பதற்றமும், சிரமங்களும் அவர்களுக்கிடையே ஒன்று சேர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளன என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
அதை இனி எதனைக்கொண்டும் இணைக்க முடியாது. சாய்ரா பானு, இந்த முடிவை வலி மற்றும் வேதனையின் வழியாகவே எடுத்திருக்கிறார். ஆகையால், இந்த நேரத்தில் அவரின் விவாகரத்து முடிவிற்கு தனிப்பட்ட பிரைவசியை அளிக்க வேண்டும்” என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
வேதனையுடன் விவாகரத்தை உறுதிப்படுத்திய ஏ.ஆர்.ரஹ்மான்:
அதை தனது எக்ஸ் தள பக்கத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், வலியோடு உறுதிப்படுத்தி இருந்தார்.
அதில், "நாங்கள் எங்களின் முப்பதாவது திருமண நாளை கொண்டாடுவோம் என்று நம்பினோம். ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தில் நடுங்கக்கூடும். இன்னும், இந்த சிதைவில் துண்டுகளாகிப் போன நாங்கள் மீண்டு வர முடியாமல் போனாலும், இந்த நிலைக்கான அர்த்தத்தைத் தேடுகிறோம்.
நாங்கள் பலவீனமாக உள்ள இந்த நாட்களைக் கடக்கும்போது, எங்கள் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கைக்கு மதிப்பும் மரியாதையும் அளித்த அழைத்து நண்பர்களுக்கும் நன்றி" என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மிகவும் உருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார்.
உறுதிப்படுத்திய மகன் அமீன்
இந்த அறிக்கையை ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு தம்பதியரின் மகன் அமீனும் தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். அதில் அவர் இந்த நேரத்தில் எங்களது குடும்பத்தின் தனியுரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
29ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்த தம்பதி:
ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு திருமணம் மறைந்த ஏ.ஆர்.ரஹ்மானின் அம்மா கரீமா பேகத்தின் ஏற்பாட்டின்கீழ் கடந்த 1995ஆம் ஆண்டு நடைபெற்றது.
இந்தத்தம்பதிக்கு கதீஜா மற்றும் ரஹீமா என்ற 2 மகள்களும் அமீன் என்ற மகனும் உள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மானின் திரை இசைப் பயணத்திலும் வளர்ச்சியிலும் முக்கியப்பங்கு வகித்தவர், சாய்ரா என பல மேடைகளில் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பரவிய வதந்தியும் விளக்கமளித்த அமீன் ரஹ்மானும்:
ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு விவகாரத்தை அறிவித்தவுடன், சில மணிநேரத்தில் தற்செயலாக ஏ.ஆர்.ரஹ்மான் குழுவில் பாடும் பாடகி மோகினி டே என்பவரும் கணவரை பிரிவதாக அறிவித்தார். இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானின் பிரிவுக்கு மோகினி டே தான் காரணம் என யூட்யூபில் சகட்டுமேனிக்குப் பலர் பேச ஆரம்பித்துவிட்டனர்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் அடிப்படை ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்பவேண்டாம் என தனது இன்ஸ்டா ஸ்டோரி மூலம் கேட்டுக்கொண்டார்.
எச்சரித்த ஏ.ஆர்.ரஹ்மான்:
அதன் அடுத்தகட்ட நகர்வாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ‘தன்னுடைய விவாகரத்து தொடர்பாக உண்மைக்கு புறம்பான, அவதூறான தகவல்களைக் கொண்ட சமூக ஊடகப் பதிவுகள், செய்தி கட்டுரைகள், யூடியூப் வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும்’ என ஏ.ஆர். ரஹ்மான் வக்கீல் நோட்டீஸ் விட்டுள்ளார். அவதூறு பதிவுகள், வீடியோக்களை நீக்காவிட்டால் சட்டப்பூர்வமாக வழக்கு தொடரப்படும் எனவும் ஏ.ஆர்.ரஹ்மான் நோட்டீஸில் எச்சரித்துள்ளார்.
டாபிக்ஸ்