Namitha: முஸ்லீமான்னு கேட்டுட்டாங்க..மீனாட்சி அம்மன் கோயிலில் அவமானம்.. சேகர்பாபு ஐயா நடவடிக்கை எடுங்க’ - கதறும் நமீதா!
Aug 26, 2024, 10:31 PM IST
Namitha: எங்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட கோயில் அதிகாரி மற்றும் உதவியாளர் மீது இந்து அற நிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். - நமீதா!
Namitha: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்தின் மீது நடிகை நமீதா குற்றம் சாட்டி இருக்கிறார்.
முரட்டுத்தனமாக நடந்து கொண்டார்கள்
இது குறித்து அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்," எனது நாட்டில்,எனது இடத்தில் நான் முதன்முறையாக நான் அந்நியமாக உணர்ந்தேன். ஏனென்றால், நான் இந்து என்று என்னை நிரூபிக்க நிர் பந்தபடுத்தப்பட்டேன். அங்குள்ள கோயில் நிர்வாகியும் அவரது உதவியாளரும் எங்களிடம் அவ்வளவு முரட்டுத்தனமாக நடந்து கொண்டார்கள்.
எங்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட கோயில் அதிகாரி மற்றும் உதவியாளர் மீது இந்து அற நிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அங்கிருந்த காவல்துறை எங்களை மிக பாதுகாப்பாக தரிசனம் செய்து வருவதற்கு உதவி செய்தார்கள். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
தரிசனம் முடித்து செய்தியாளர்களை சந்தித்த நமீதாவும் அவரது கணவரும் சந்தித்தனர்.
நமீதா கணவர் பேசும் போது,"நாங்கள் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்ற போது அங்கிருந்த கோயில் அதிகாரிகள் எங்களை தடுத்து நிறுத்தி ‘நீங்கள் இந்துவா முஸ்லீமா?’ என்று கேள்வி கேட்டதோடு, நாங்கள் முஸ்லீம் என்று தகவல் கிடைத்து இருப்பதாக கூறினர். அத்தோடு இந்து என்பதற்கான சான்றையும் கேட்டனர். நாங்கள் ஆதார் அட்டையை காட்டினோம். ஆனால், அதில் மத அடையாளம் இல்லை என்று கூறியதோடு அவமரியாதையாகவும் பேசினர்.
கிட்டத்தட்ட 15 நிமிடத்திற்கு மேலாக காத்திருக்க வைத்தனர். நாங்கள் இந்துக்கள் என்று பலமுறை சொன்ன போதும் கூட அவர்கள் கேட்கவே இல்லை. மீனாட்சியம்மன் கோயிலில் இதுபோன்று இந்து மதத்திற்கான சான்று கேட்டது மன வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பல்வேறு மாநிலங்களில் இருந்து மக்கள் வரக்கூடிய கோயிலில் இப்படி நடந்து கொள்வது தமிழகத்திற்கு தவறான பெயரை சேர்த்து விடும். பிறப்பால் இந்துவாக இருந்து எங்களது குழந்தைகளுக்கு கிருஷ்ணருடைய பெயரை வைத்திருக்கிறோம் எங்களிடமே கோயில் அதிகாரிகள் அவமரியாதையாக நடந்து கொண்டனர். இருந்தபோதிலும் நாங்கள் இதனை அரசியலாக்க நினைக்கவில்லை. இதை அரசியலாக்க வேண்டாம்” என்று பேசினர்.
நடிகை நமீதா பேசும் போது, “நான் இதுவரை 5 முறை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்திருக்கிறேன். யாருக்கும் தொந்தரவு அளிக்கக்கூடாது என்பதற்காகவே யாருக்கும் தெரியாமலேயே நான் சென்று விடுவேன்.
அதேபோன்றுதான் இன்றும் சென்றேன். ஆனால் எனக்கு நடந்தது வேறு. காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி. ஏனெனில் அவர்கள்தான் நன்றாக தரிசனம் செய்ய வைத்தார்கள், பாதுகாப்பாக திரும்பினோம். இது தொடர்பாக புகார் அளிக்க போவதில்லை.” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்