Kaniha: ‘ஒரு கை குறைந்ததால் கிடைத்த வாய்ப்பு’ சினிமா எண்ட்ரி குறித்து கனிகா!
Jan 22, 2023, 06:25 AM IST
Actress Kaniha Interview: ‘சினிமாவிற்கும், சீரியலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நமக்கு முதலில் திருப்தி வரவேண்டும்; அது சீரியலில் கிடைக்கிறது. என்ன தான் 50 படம் பண்ணாலும், சீரியலில் ஒரு எபிசோடில் நடித்து அதில் கிடைக்கும் அங்கீகாரம் பெரிதாக இருக்கிறது’ -கனிகா!
ஃபை ஸ்டார் படம் மூலம் அறிமுகமாகி வரலாறு உள்ளிட்ட பல முக்கிய படங்களில் நடித்த கனிகா, இப்போது சன்டிவி எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். சினிமாவில் 20 ஆண்டுகளை கடந்தும் அதே இளைமையோடு பயணித்துக் கொண்டிருக்கும் கனிகா, பிரபல தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்திருக்கிறார். இதோ அந்த பேட்டி:
சினிமாவில் வந்து 20 ஆண்டுகள் ஆகிறது. இத்தனை ஆண்டுகள் உடனே போன மாதிரி எனக்கு தோன்றவில்லை. நிறைய சம்பவங்கள், நிறைய அனுபவங்கள், எல்லாத்தையும் தாண்டி எதிர்நீச்சல் போட்டு 20 ஆண்டுளை கடந்து, இப்போது சன்டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
ஃபை ஸ்டார் படத்தில் அறிமுகம் ஆன போது என்னோட பெயர் ஈஸ்வரி, இப்போ எதிர்நீச்சல் சீரியலில் என்னுடைய பெயர் ஈஸ்வரி. அப்போ இருந்த ஈஸ்வரிக்கும், இப்போ இருக்கும் ஈஸ்வரிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. நடிகையாகவும் சரி, மனிதியாகவும் சரி.
தமிழ் எனக்கு தாய் மொழி, ஆங்கிலம் பள்ளியில் கற்றது. இந்தி கொஞ்சம் தாமதமாக கற்றுக்கொண்டேன். தெலுங்கு பின்னர் கற்றுக்கொண்டேன். சமீபத்தில் நிறைய மலையாள படம் பண்ணேன், மலையாளமும் கற்றுக்கொண்டேன்.
நான் ரொம்ப கூச்சம் நிறைந்த பெண்ணாக தான் சினிமாவில் அறிமுகமானேன். நடிகையாக நிறைய படங்கள் நான் செய்யவில்லை. படிப்பு, நடிப்பு, அப்புறம் கல்யாணம் ஆகி அமெரிக்கா போய்ட்டேன். மீண்டும் இந்தியா வந்த பின், பிசினஸ், அப்புறம் நடிச்சேன். நிறையா படம் நான் நடிக்கவில்லை, அளவா நடிச்சா போதும் என முடிவு செய்தேன்.
நான் நடிப்பை தேடி போகவில்லை. என்னை தேடி நடிப்பு வந்தது. மூன்றாம் ஆண்டு ராஜஸ்தானில் கல்லூரி படித்துக் கொண்டிருந்தேன். ஒரு மாடலிங் நிகழ்ச்சியில், ஒரு ஆள் குறைந்ததால், என் உயரத்தை பார்த்து அங்கு நிற்கவைத்தார்கள். மற்றபடி எனக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை.
அந்த நிகழ்ச்சி, ஒரு அட்டை படத்தில் வந்தது. அதை பார்த்த ஷங்கர் சார், பாய்ஸ் படத்திற்கு என்னை அழைத்தார். அதே படத்தை பார்த்து மணிரத்னம் சார் அலுவலகத்தில் இருந்து ஃபை ஸ்டார் வாய்ப்புக்கு அழைத்தார்கள்.
சன் டிவியில் இதற்கு முன் தங்கவேட்டை என்கிற நிகழ்ச்சியை நான் நடத்திக்கொண்டிருந்தேன். அதன் பின் திருச்செல்வம் சார், எதிர் நீச்சல் ஷோ செய்வதாக கூறியதாலும், அது சன்டிவியில் வரும் என்பதாலும் நான் ஒப்புக்கொண்டேன்.
நான் பள்ளியை மதுரையில் படித்திருந்ததால், எதிர்நீச்சல் படத்தில் என்னுடைய ஸ்லாங்கிற்கு எந்த பிரச்னையும் இல்லை. எனக்கு அந்த கதாபாத்திரம் எல்லா வகையிலும் பொருந்தியிருந்தது.
சீரியல் செய்தால் முன்பு ஒரு மாதிரி பேசுவார்கள். கொரோனாவிற்கு பின் சினிமா, சீரியல், வெப்சீரியஸ் எல்லாமே ஒன்றாகிவிட்டது. அந்த வகையில் எனக்கு சினிமாவிற்கும், சீரியலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நமக்கு முதலில் திருப்தி வரவேண்டும்; அது சீரியலில் கிடைக்கிறது. என்ன தான் 50 படம் பண்ணாலும், சீரியலில் ஒரு எபிசோடில் நடித்து அதில் கிடைக்கும் அங்கீகாரம் பெரிதாக இருக்கிறது,’’
என்று அந்த பேட்டியில் கனிகா கூறியுள்ளார்.
டாபிக்ஸ்