தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Shreekumar: சீரியலில் இருக்கும் பாலியல் தொல்லை.. சாதி.. தகுதியில்லாதவங்களுக்கு தரும் விருது - உடைத்து பேசிய ஸ்ரீகுமார்

Shreekumar: சீரியலில் இருக்கும் பாலியல் தொல்லை.. சாதி.. தகுதியில்லாதவங்களுக்கு தரும் விருது - உடைத்து பேசிய ஸ்ரீகுமார்

Marimuthu M HT Tamil

Sep 29, 2024, 04:50 PM IST

google News
Shreekumar: சீரியலில் இருக்கும் பாலியல் தொல்லை பற்றியும், சாதி பற்றியும், தகுதியில்லாதவங்களுக்கு தரும் விருது குறித்தும் நடிகர் ஸ்ரீகுமார் உடைத்துப் பேசியுள்ளார்.
Shreekumar: சீரியலில் இருக்கும் பாலியல் தொல்லை பற்றியும், சாதி பற்றியும், தகுதியில்லாதவங்களுக்கு தரும் விருது குறித்தும் நடிகர் ஸ்ரீகுமார் உடைத்துப் பேசியுள்ளார்.

Shreekumar: சீரியலில் இருக்கும் பாலியல் தொல்லை பற்றியும், சாதி பற்றியும், தகுதியில்லாதவங்களுக்கு தரும் விருது குறித்தும் நடிகர் ஸ்ரீகுமார் உடைத்துப் பேசியுள்ளார்.

Shreekumar Ganesh: சீரியலில் தகுதியே இல்லாதவர்களுக்கு எல்லாம் அவார்டு கொடுப்பார்கள் எனவும், சீரியலிலும் சாதிப்பிரச்னைகள் இருக்கிறது எனவும் நடிகர் ஸ்ரீகுமார் கணேஷ் பேட்டியில் கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக நடிகர் ஸ்ரீகுமார் கணேஷ், கலாட்டா தமிழ் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்த பதில்களின் தொகுப்பைப் பார்க்கலாம்.

’’சித்தி சீரியலில் கிளைமேக்ஸின்போது கிரிக்கெட் மேட்சின் டி.ஆர்.பி. பாதிக்கப்பட்டது. ஆனால், இப்போது அப்படியில்லை. அது பற்றி உங்கள் கருத்து?

பதில்: 15 ஆண்டுகளுக்கு முன் சீரியலுக்கு இருந்த மதிப்பு வேறு. சித்தி, மெட்டி ஒலி, விடாது கருப்பு, நம்பிக்கை போன்ற சீரியல்களின் தரமே வேறு. முன்பு எல்லாம் மெனக்கெடுதல் அதிகமாக இருந்தது. இப்போது சீரியல் இயக்குநர்களுக்கு அழுத்தம் இருக்கு. ஏனென்றால், ஒரு நாளைக்கு 20 நிமிஷம் கொடுக்கவேண்டும். தவறாக இருக்கிறதா, பரவாயில்லை, எடுங்க எடுங்கன்னு சீரியல் எடுக்கவைச்சிடுறாங்க. இன்னும் கொஞ்ச நாட்களில் சீரியல் அப்படிங்கிறதே போயிடும். எல்லோரும் மீண்டும் இறங்கிப்போய் வேலைப் பார்த்தால் தான், அது திரும்பவும் கிடைக்கும்.

கேரளாவில் நிறைய பேர் கொடுத்தப் பாலியல் புகாரின் அடிப்படையில், விசாரணைகள் நடக்கிறது. சீரியலில் இந்த மாதிரியான பிரச்னைகள் இருக்கிறதா?

பதில்: எல்லா துறைகளிலும் பிரச்னைகள் இருக்கிறது. டிவி துறைகளிலும் பாலியல் புகார்கள் இருக்கின்றன. சிலபேர் தவறான விஷயங்கள் பண்ணும்போது தூக்கிப்போட்டு வர்றவங்களும் இருக்காங்க. எனக்கு தெரிந்து, செருப்பைக் கழற்றி அடிச்சவங்களும் இருக்காங்க. காலில் விழுந்து மன்னிப்புக்கேட்டவங்களும் இருக்காங்க. ஓ.கேன்னு போனவங்களும் இருக்காங்க. இதில் இரண்டுபேருடைய தவறும் இருக்கிறது. இப்போது நாம் கூப்பிட்டால், நம்மைப் பற்றி வெளியில் போய் சொல்லிவிடுவார்களே என பயம் வந்தால் தான், இந்த மாதிரியான பிரச்னைகள் இருக்காது. ஒரு பயம் இல்லை என்றால், சிலர் ஆடுவாங்க. சில பேருக்கு எல்லாம் ஒரே மாதிரி பிரச்னை இருக்காது. அவங்க எல்லாம் பாவம். அப்படி ஒன்னுமே பண்ணமுடியாத இரண்டு, மூணு பேரை நானே காப்பாத்தியிருக்கேன். நான் மிகைப்படுத்தி சொல்லல. அப்படி ஒருத்தவங்களுக்கு வந்து நான் காசு செலவு பண்ணி,வேறு ஒரு கோர்ஸ் படிக்க வைச்சு, நல்ல ஒரு வேலையைப் பார்க்கச் சொல்லியாச்சு. பதிலுக்கு சில நேரங்களில், உங்களுக்கு என்னப் பிரச்னைன்னு சம்பந்தப்பட்ட பொண்ணுங்க கேட்டுவிட்டார்கள் என்றால் ஒன்றுமே செய்யமுடியாது. இது ஒரு பெரிய விஷயம் கிடையாது. எனக்கு மனைவி, பொண்ணு, அம்மா, அக்கா எல்லாரும் இருக்காங்க. அவங்க வலி என்னனு தெரியும்.

சினிமாவில் சாதிப் பிரச்னை இருக்கு. சீரியலில் சாதிப் பிரச்னைகள் எல்லாம் இருக்குதா?

பதில்: சீரியலில் முன்னாடி அப்படி இருந்தது. தான் தான் மேல அப்படின்னு நினைப்பாங்க இல்லையா, அந்த மாதிரி ஆளுங்ககிட்ட எல்லாம் சீரியல் வாய்ப்பு வாங்க முடியாது. அவங்க சாதி ஆட்களை மட்டும் தான் சீரியலில் போட்டு எடுப்பாங்க. நான் பேசுற மொழியை வைத்தே, நான் யார்ன்னு ஈஸியாக கண்டுபிடிச்சிடுவாங்க. ஒரு சீரியலில் லைவ் டப்பிங். அப்போது ஒரு கட்டத்தில் சென்னை வட்டார வழக்கில் நான் பேசிடுறேன். அப்போது அங்க இருக்கிற ஒரு நடிகர், அவனோ இவன் அப்படிங்கிற மாதிரி சூசகமாக பேசுனாங்க. குஷ்பூ மேடம் தயாரிக்கும் சீரியலில், நான் ஹீரோவாக செலக்ட் ஆகியிருந்தேன். அப்போது எனக்கு ஜோடி, சோனியா அகர்வால். அப்போது சிலர், ஹீரோவாக இவங்களை மாதிரி ஆட்கள் இருக்கணும்னு சொன்னவுடன்,குஷ்பூ மேடம் பிடிச்சி, சத்தம்போட்டுவிட்டுட்டாங்க. இதையெல்லாம் தாண்டிதான் வந்திருக்கிறோம்.

சீரியலில் நிறைய கேரக்டர்கள் இருக்கு. இது எல்லாம் நடிப்பை அடிப்படையாக வைத்து இல்லையே என்ற வருத்தம் இருக்கிறதா?

பதில்: ஆம். சத்தியமாக நடிப்பை அடிப்படையாக வைத்து சீரியல் கதாபாத்திரங்கள் இல்லை. ‘வானத்தைப் போல்’ சீரியலில் பெஸ்ட் அண்ணன் அவார்டு மூன்று தடவை வாங்கினேன். நடிப்பு மட்டுமே காரணம் அல்ல. அதுக்கு டி.ஆர்.பியும் ஒரு காரணம். சில பேர் வந்து தனக்கு அவார்டு கொடுத்து ஆகணும், இல்லையென்றால், நான் சீரியலைவிட்டுப் போயிடுவேன் அப்படி எல்லாம் சொல்வாங்க. சில பேர் உண்மைக்கே நல்லா நடிப்பாங்க. சமீபத்தில் இறந்துபோன மாரிமுத்து அண்ணனுக்கு அவார்டு கொடுத்தாங்க. அது தகுதியானது தான். டிவி சேனல்கள் தகுதியானவங்களுக்கு நீதிபதிகள் வைச்சு கொடுக்கணும். சிலர் என்னை இவருக்குக் கிடைக்கலான்னு பேசுறார் அப்படி சொல்வாங்க. ஆனால், உண்மையிலேயே எனக்கு நிறைய கிடைச்சிருக்கு. கிடைக்காதவங்களுக்கும் கிடைக்கணும் அப்படிங்கிறதுதான் என் கோரிக்கை. எனவே, நன்றாக நடிக்கிறவங்களுக்கும் அவார்டு கொடுக்கணும். கண்றாவியா நடிக்குறவங்களுக்கு இல்லை.

நன்றி: கலாட்டா தமிழ்

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி