Actor Prithviraj: ஹேமா கமிட்டி அறிக்கை.. 'குற்றம் செய்தவர்களை தண்டிப்பது முக்கியம்'..பிருத்விராஜ் காட்டம்!
Aug 27, 2024, 03:11 PM IST
Actor Prithviraj Speech: மலையாள சினிமா உலகில் புயலை கிளப்பி இருக்கும் ஹேமா கமிட்டி விவகாரத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர்களது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக கண்டிப்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நடிகர் பிரித்விராஜ் கூறியுள்ளார்.
Actor Prithviraj Speech: கேரளாவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை. திரையுலகில் பெண்கள் துன்புறுத்தப்படுவது மற்றும் சுரண்டப்படுவது குறித்த பல நிகழ்வுகளை சுட்டிக்காட்டியது. இது குறித்து மலையாள திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். பல பிரபலங்களும் ஹேமா கமிட்டியின் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், மூத்த நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் கருத்து எதுவும் தெரிவிக்காமல் உள்ளனர்.
பிருத்விராஜ் காட்டம்
இந்நிலையில் தற்போது நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல்வேறு தளங்களில் பயணித்து வரும் பிருத்விராஜ் சுகுமாரன் இந்த விஷயத்தில் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துள்ளார். துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் மக்கள் அதிகார பதவிகளில் இருந்து விலக வேண்டும் என்றும், ஹேமா குழு அறிக்கையின் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்.
"எந்தவித அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை"
மேலும் அவர் கூறுகையில், மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம் (அம்மா) இந்த விஷயத்தில் சரியாக செயல்படாது பற்றி தெரிவித்ததோடு ஹேமா கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கை தனக்கு எந்தவித அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.
"அறிக்கையில் உள்ள கண்டுபிடிப்புகள் குறித்து மிகவும் தீவிரமாக விசாரணை நடத்தப்பட வேண்டும். பாலியல் வன்கொடுமை செய்தவர்களை தண்டிப்பது முக்கியம். அதிகார பதவிகளில் இருப்பவர்கள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் போது பதவி விலக வேண்டும். ஆச்சரியப்படும் விதமாக, அறிக்கையில் உள்ள கருத்துக்களால் தான் அதிர்ச்சியடையவில்லை என்றும் பிருத்விராஜ் கூறியதாகக் கூறப்படுகிறது. "எனது திரைப்பட இருப்பிடம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதோடு எனது பொறுப்பு முடிவடையவில்லை, முழு தொழில்துறையும் மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பது முக்கியம்" என்று அவர் மேலும் கூறினார்.
திட்டமிட்ட நடவடிக்கை கூடாது
மலையாள திரையுலகில் தங்களுக்கு எதிராக பேசுபவர்களை தடை செய்தவர்கள் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது என்றும் பிருத்விராஜ் கூறியுள்ளார். இதேபோல தவறான குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ள பெண்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
"நான் அதை எதிர்கொள்ளவில்லை என்பதற்காக திரையுலகில் ஒழுங்கமைக்கப்பட்ட சக்தி இல்லை என்பதை என்னால் மறுக்க முடியாது. கலைஞர்களை தடை செய்ய இதுபோன்ற திட்டமிட்ட நடவடிக்கை இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் கூறினார். தொடர்ந்து பேசிய பிரித்விராஜ், பெண்களுக்காக குரல் கொடுக்கும் வகையில் அம்மாவில் பெண் உறுப்பினர் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மலையாள திரையுலகில் நடந்தது என்ன?
கேரளாவில் கடந்த 2017ஆம் ஆண்டில் காரில் நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து நீதிபதி ஹேமா தலைமையிலான மூவர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்த குழு விசாரணை மேற்கொண்டு 2019-ல் அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால், இந்த அறிக்கையை வெளியிட தடை இருந்ததால் இதன் விவரங்கள் வெளியிடப்படாமல் இருந்தன. தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டு அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்