42 years of Vaazhvey Maayam: கங்கை அமரன் வாழ்க்கையை மாற்றிய வாழ்வே மாயம்!
Jan 26, 2024, 05:30 AM IST
தன் காதலியை தன்னிடம் இருந்தே காப்பாற்ற போராடும் ராஜா சூழல் காரணமாக அன்பிற்கு ஏங்கும் மற்றொரு பெண்ணை அரவணைத்து அந்தஸ்தை கொடுப்பதாக அழகாக படம் உருவாக்கப்பட்டிருந்தது.
வாழ்வே மாயம்.. திரைப்படம் 1982 ஜனவரி 26 ல் வெளியிட்டு இன்று 42 வருடங்கள் உருண்டோடி உள்ளது. காதலையும் தியாகத்தையும் பேசிய இந்த வாழ்வே மாயம் மக்கள் மனதில் மாயமாக மாறாமல் நிலைத்து நிற்கிறது. நடிகர் கமல்ஹாசன் படங்களில் இது மிகவும் முக்கியமான படமும் கூட.
தாசரி நாராயண ராவ் கதைக்கு ஏ.எல்.நாராயணன் வசனம் எழுதி ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கிய படம். அந்த காலத்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி தயாரித்து இருந்தார்.
ராஜாவாக கமல்ஹாசன், தேவியாக ஶ்ரீதேவி, ராதாவாக ஶ்ரீப்ரியா, பேபியாக மனோரமா இவர்களுடன் ஜெய்சங்கர், பிரதாப் போத்தன், சுகுமாரி, பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர்.
ராஜா மிகவும் பெரிய செல்வந்தர் மகன். எப்போதும் துறுதுறு என்று சுற்றி கொண்டிருக்கும் பணக்கார வீட்டு பையன். அவனுக்கு விமானத்தில் பணி புரியும் பெண் தேவியை ஒருமுறை சந்திக்கும் போது காதல் ஏற்படுகிறது. அதில் விருப்பம் இல்லாமல் விலகி விலகிச் செல்கிறாள் தேவி. ஆனாலும் விடாமல் அவளை துரத்துகிறான். அவளை தனது காதலை ஏற்றுக்கொள்ள வைக்க பல முயற்சிகளையும் எடுக்கிறான். ஒரு சூழலில் ராஜாவை தேவி ஏற்றுக் கொள்கிறாள். மகிழ்ச்சியாக இவர்கள் காதல் போய் கொண்டு இருக்கும் போது வீட்டில் இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்படுகிறது. இந்த நிலையில் தான் கதையில் முக்கிய திருப்பம் ஏற்படுகிறது.
ராஜா தனது காதலை பற்றி சொன்ன நேரத்தில் காதலை தேவி ஏற்றுக்கொள்ள மறுத்து பல அவமானங்களை தேவி தந்த காரணத்தினால் திருமணம் வரைக்கும் வந்து விட்ட காதலை மறுத்து திருமணத்தை கைவிடும் படி பழிவாங்குவார். தேவி உடைந்து போகிறாள். இதற்கு பின் திரைக்கதை வேறு பாதையில் செல்ல ஆரம்பிக்கும். ராஜாவுக்கு எந்த நேரத்திலும் உயிரை பறிக்கும் புற்றுநோய் வந்திருக்கும். அதற்காகவே திருமணத்தை நிறுத்தி விட்டு தேவியை பழிக்கு பழி வாங்குவதாக நடித்து அவளை வெறுப்படைய செய்வார். அதே ராஜா தேவியை மறக்க முடியாமல் விலைமாதான ராதா வீட்டில் தஞ்சமடைவார். தேவியை மறக்க குடிக்க ஆரம்பித்தார்.
காதலனை ராதாவிடம் இருந்து மீட்க தொடர்ந்து தேவி முயற்சி செய்வார். ஒவ்வொரு முறையும் தேவி தன்னை வெறுத்து ஒதுக்கும் படியாக ராஜா நடந்து கொள்வார். தேவி நேரடியாக ராதா வீட்டுக்கு சென்று பேச ராஜா அவமதிப்பு செய்ய எந்த நிலையிலும் ராஜா தன்னை திருமணம் செய்ய மாட்டார் என்ற முடிவுக்கு வந்த பின் தேவிக்கும் இன்னொருவருக்கும் திருமணம் முடிகிறது.
இந்த நேரத்தில் ராஜா அவ்வாறு நடந்து கொண்டதின் காரணம் தனது காதலி தேவியின் வாழ்க்கை சிறப்பாக இருப்பதற்காகத்தான் என்ற உண்மையை தேவியின் தோழி பேபி சொல்லும் போது தான் தேவிக்கு ராஜாவின் தியாகம் தெரிய வரும்.
இப்போது ராஜா உடல் நிலை மோசமான தகவல் வர தேவி மற்றும் ராஜா குடும்பத்தினர் ராதா வீட்டுக்கு விரைகின்றனர். எல்லோரும் போக ராதா கழுத்தில் ராஜா தாலி கட்டிய நிலையில் உயிர் விட ராதாவின் உயிரும் பிரியும். இப்படி தன் காதலியை தன்னிடம் இருந்தே காப்பாற்ற போராடும் ராஜா சூழல் காரணமாக அன்பிற்கு ஏங்கும் மற்றொரு பெண்ணை அரவணைத்து அந்தஸ்தை கொடுப்பதாக அழகாக படம் உருவாக்கப்பட்டிருந்தது.
இந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்கள்.. அதுதான் இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் இசை அமைக்க ஆரம்பித்த நேரம். இந்த படம் உண்மையில் கங்கை அமரனை உயர்த்தி பிடித்தது.
''நீலவான ஓடையில்"
"வந்தனம் என் வந்தனம்"
"வாழ்வே மாயம்'"
"ஏ...ராதாவே"
"தேவிஶ்ரீதேவி' என்ற பாடல்களை கொடுத்து இசை ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இன்றும் கூட அந்த பாடல்கள் ரிங்டோனாக ஒலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்