Opinion Poll: தமிழகத்தில் எந்தெந்த கட்சிகள் எத்தனை தொகுதிகளில் ஜெயிக்கும்?-கருத்துக் கணிப்பு கூறுவது என்ன?
Apr 15, 2024, 07:52 AM IST
Loksabha Election 2024 Opinion Poll: நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சிக்கு (பாஜக) எதிராக I.N.D.I.A கூட்டணி உருவாகியுள்ளது. இந்தக் கூட்டணியில் திமுக அங்கம் வகிக்கிறது.
“தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும்” என ஏபிபி செய்தி நிறுவனம், சி-வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
I.N.D.I.A கூட்டணிக்கு தமிழ்நாடு ஒரு முக்கியமான கோட்டையாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர முயற்சியால் மாநிலத்தில் கட்சியை நிலைநிறுத்த பாஜகவின் முயற்சிகளுக்கு மத்தியில் இந்தக் கூட்டணி அதிக ஆதரவைப் பெற்றுள்ளதாக கருத்துக் கணக்கில் தெரியவந்துள்ளது.
நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சிக்கு (பாஜக) எதிராக I.N.D.I.A கூட்டணி உருவாகியுள்ளது. இந்தக் கூட்டணியில் திமுக அங்கம் வகிக்கிறது. இத்தேர்தலில் தமிழ்நாடு ஒரு முக்கியமான மாநிலமாக அமைந்துள்ளது என்பது மறுப்பதற்கில்லை. அதே நேரத்தில் பாஜகவும் தமிழகத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. சூறாவளிப் பிரசாரத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் முன்னெடுத்து வருகின்றன.
இந்நிலையில், தமிழ்நாட்டில் ஏபிபி நியூஸ் மற்றும் சி-வோட்டர் இணைந்து நடத்திய சமீபத்திய கருத்துக் கணிப்பில் வெளியான தகவல்கள் இதோ..
"திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணிக்கு, தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளில் 39 இடங்களைப் பெற வாய்ப்பு இருப்பது கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. மாநிலத்தில் மறுபுறம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) ஓர் இடத்தில் கூட வெற்றி பெறாது என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது" என அந்தக் கருத்துக் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 30 இடங்களைக் கைப்பற்றும், மீதமுள்ள 9 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுவதாக” அந்தக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிகே), ம.தி.மு.க., ஐ.யு.எம்.எல்., மற்றும் கே.எம்.டி.கே ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய இந்தக் கூட்டணி, தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் ஆதிக்கம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.பா.ஜ.க.வுடன் உறவை துண்டித்த அதிமுக, இந்தத் தேர்தலில் கடும் சவாலை எதிர்கொண்டுள்ளது.
கருத்துக் கணிப்புகள் ஒருவேளை துள்ளியமானதாக மாறினால், 18வது மக்களவையில் பாஜக மற்றும் காங்கிரஸுக்கு அடுத்தபடியாக மக்களவையில் திமுக மீண்டும் மூன்றாவது பெரிய கட்சியாக முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019 இல், பாஜக மொத்தம் 293 இடங்களையும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 50 இடங்களையும், திமுக 20 இடங்களையும் வென்றது.
39 இடங்களைக் கொண்ட தமிழ்நாடு, அதிக மக்களவை உறுப்பினர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புகிறது.
தமிழகத்தில் பா.ஜ.க தேர்தலில் வெற்றி பெற தனது முயற்சிகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில் இந்தக் கருத்துக் கணிப்பு வெளி வந்துள்ளது. பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் மொழியை உலக அளவில் மேம்படுத்துவோம் என உறுதிமொழி எடுத்தார். தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை உயர்த்த உலகளவில் திருவள்ளுவர் பண்பாட்டு மையங்கள் அமைக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. மோடியின் தமிழக வருகைகள் மற்றும் தமிழ் கலாச்சார சின்னங்களுடனான ஈடுபாடுகள் தமிழ் சமூகத்துடன் இணைவதற்கான ஒரு ஒருங்கிணைந்த முயற்சியைக் குறிக்கிறது. எந்தெந்தக் கட்சிகள் எத்தனை இடங்களை வெல்லும் என்பது தேர்தல் முடிவு வெளியாகும் ஜூன் 4ம் தேதி தெரியவரும்.
பொறுப்புத்துறப்பு: தற்போதைய கருத்துக்கணிப்பு முடிவுகள் மற்றும் கணிப்புகள் CVoter கருத்துக் கணிப்பு CATI நேர்காணல்கள் (கணினி உதவி தொலைபேசி நேர்காணல்) மாநிலம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோர் மத்தியில் நடத்தப்பட்டது என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் மாறவும் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்