Lok Sabha Election 2024 Results: திமுக கூட்டணி முன்னிலை.. முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் கமல்ஹாசன்
Jun 04, 2024, 06:11 PM IST
Lok Sabha Election 2024 Results: இந்தியாவை காக்கும் போரில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து களம் கண்ட கூட்டணி கட்சியினருக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும் எங்கள் கூட்டணிக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க"
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழகம் புதுச்சேரியில் திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் முதல்வர் முகஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
"திமுக அரசு செய்து காட்டிய பணிகளால் கிடைத்த வெற்றியை அதன் தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் அறுவடை செய்திருக்கிறது.
மக்களுக்காக சிந்தித்து மக்கள் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து நடத்தப்படும் நல்லாட்சிக்கு ஆதரவளிக்க மக்களும் தயாராக இருப்பதையே இந்த வெற்றி காட்டுகிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தொடங்கி தான் எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலுமே அருமை நண்பர் திரு மு. க ஸ்டாலின் அவர்கள் வெற்றியை குவித்திருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.
இந்தியாவை காக்கும் போரில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து களம் கண்ட கூட்டணி கட்சியினருக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும் எங்கள் கூட்டணிக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
சிந்தாமல் சிதறாமல் சந்தேகமே இல்லாமல் நாம் பெற்றிருக்கும் இந்த வெற்றி இந்தியாவிற்கு வழியும் ஒளியும் காட்டக் கூடியவை
இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க" இவ்வாறு அதில் நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல்
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக பார்க்கப்படும் இந்திய தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மற்ற 542 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 64.20 கோடி பேர் வாக்குரிமையை செலுத்தி உள்ளனர். 8,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
களத்தில் 950 வேட்பாளர்கள்
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.இதில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணியிலும், நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிட்டது. மொத்தம் 950 வேட்பாளர்கள் களம் கண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவிற்கு வாய்ப்பு உள்ளதா?
இந்த தேர்தலில் பாஜகவின் மாநில தலைவரான அண்ணாமலை கோவையில் களம் காண்டார். அதேபோல் அக்கட்சியை சேர்ந்த தமிழிசை சவுந்தர் ராஜன் தெலுங்கானாவில் ஆளுநராக இருந்த நிலையில் தனது பொறுப்பை ராஜினாமா செய்து விட்டு மத்திய சென்னையில் போட்டியிட்டார். ஆனால் இருவரும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
எதிர்பார்ப்பில் மக்கள்
அடுத்த 5 ஆண்டுகள் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை ஆட்சி செய்யப்போவது யார் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.
உலகமே உற்று நோக்கும் இந்தியாவில் ஏற்கனவே 2 முறை ஆட்சியில் இருந்த பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்றுமா.. பிரதமர் மோடி 3 ஆவது முறையாக ஆட்சி அமைப்பாரா.. அல்லது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இணைந்துள்ள இந்தியா கூட்டணி ஆட்சியை கைப்பற்றுமா என்ற கேள்வி மக்களிடையே உள்ளது.
கடும் போட்டி
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இண்டியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இதனிடையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணிக்கே அதிக வாய்ப்புகள் உள்ளது என தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9