Nainar Nagendran: ‘நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல்! ரயிலில் பிடிப்பட்ட 4 கோடி! விரட்டி விரட்டி ரெட்டு!’
Apr 08, 2024, 01:30 PM IST
”திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் நயினார் நாகேந்திரனுக்காக எடுத்து செல்வதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்”
நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் நயினார் நாகேந்திரனுக்காக ரயிலில் 4 கோடி ரூபாய் பணம் கொண்டு செல்ல முயன்ற புகாரில் பாஜக பிரமூகர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் 2024
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27ஆம் தேதி நிறைவடைந்தது. மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 30ஆம் தேதி உடன் நிறைவடைந்ததால் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
தமிழக தேர்தல் களத்தில் பாஜக!
தமிழ்நாட்டை பொறுத்தவரை 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு திமுக, அதிமுக கட்சிகளுக்கு போட்டியாக பாஜகவும் தனியாக கூட்டணிகளை அமைத்து போட்டியிடுகிறது.
கோயம்புத்தூர் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தென் சென்னை தொகுதியில் தமிழிசை சவுந்தராஜன், மத்திய சென்னை தொகுதியில் வினோஜ் பி செல்வம், வட சென்னை தொகுதியில் வழக்கறிஞர் பால் கனகராஜ், திருவள்ளூர் தொகுதியில் பொன்.பாலகணபதி, திருப்பூர் தொகுதியில் ஏபி முருகானந்தம், நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன், சிதம்பரம் தொகுதியில் கார்த்தியாயினி, நீலகிரி தொகுதியில் எல்.முருகன், நாமக்கல் தொகுதியில் கேபி.ராமலிங்கம், கிருஷ்ணகிரியில் நரசிம்மன் உள்ளிட்டோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
ரயிலில் பணம் பறிமுதல்
சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை நோக்கி செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பணம் எடுத்து செல்லப்படுவதாக தாம்பரம் காவல் ஆணையரக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் எழும்பூரில் இருந்து தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்த நெல்லை விரைவு ரயிலில் ஏசி கோச்சில் போலீசார் நடத்திய சோதனையில் மூன்று பேரிடம் இருந்து 3.90 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் போலீசார் தகவல் தெரிவித்தனர்.
பணத்தை கொண்டு சென்ற சென்னை புரசைவாக்கம் ப்ளூ டைமண்ட் மேலாளர் சதீஷ், அவரது தம்பி நவீன், லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகியோரை விசாரித்ததில், சதீஷ் பாஜகவில் உறுப்பினர் ஆக உள்ளது தெரிய வந்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மூலம் கருவூலத்திற்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில், பின்னர் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நயினார் நாகேந்திரனுக்கு தொடர்புடைய ப்ளூ டைமண்ட் ஹோட்டல் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
நயினார் நாகேந்திரன் விளக்கம்!
இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அரசியல் காழ்புணர்ச்சி உடன் திமுக குற்றச்சாட்டுக்களை முன் வைக்கிறது. தேர்தல் ஆணையத்தில் புகார்களை அளிக்கிறது என குற்றம் சாட்டி இருந்தார்.