World Cup 2023: தரமான பவுலிங், சிறப்பான பேட்டிங் - இலங்கையை வீழ்த்தி நல்ல ரன் ரேட்டை பெற்ற நியூசிலாந்து
Nov 09, 2023, 08:25 PM IST
அரையிறுதியில் நுழைவதற்கான பிரகாசமான வாய்ப்புடன் கூடிய நல்ல ரன்ரேட்டுடன் இலங்கையை வீழ்த்தியுள்ளது நியூசிலாந்து அணி. அரையிறுதி வாய்ப்பை பெறும்பட்சத்தில் நியூசிலாந்து அணி, இந்தியாவை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்ளும். இலங்கை அணியின் சாம்பியன்ஸ் டிராபி வாய்ப்பு வங்கதேசம் போட்டி முடிவில் உள்ளது.
உலகக் கோப்பை தொடரின் 41வது போட்டி நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையே பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட் செய்த இலங்கை, நியூசிலாந்து பவுலர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 46.4 ஓவர்களில் 171 ரன்களில் ஆல்அவுட்டாகியது. ஓபனிங் பேட்ஸ்மேனான குசாப் பெரேரா மட்டும் அதிரடியாக பேட் செய்து 28 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார்.
இவருக்கு அடுத்தபடியாக பவுலரான மகேஷ் தீக்ஷனா, 91 பந்துகளை எதிர்கொண்டு 39 ரன்கள் எடுத்து அணியை சரிவிலிருந்து மீட்டு ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி விக்கெட்டுக்கு தீக்ஷனா - மதுஷங்கா ஆகியோர் இணைந்து 43 ரன்கள் சேர்த்தனர்.
நியூசிலாந்து பவுலர்களில் ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பெர்குசன், ஸ்பின்னர்களான சாண்ட்னர், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
இந்த போட்டியில் வெற்றியுடன் நல்ல ரன் ரேட்டை பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை உறுதிபடுத்த முடியும் என்ற நிலையில் களமிறங்கிய நியூசிலாந்து 23.2 ஒவரில் 5 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது.
நியூசிலாந்து பேட்ஸ்மேன்களில் டேவான் கான்வே 45 ரன்கள் எடுத்தார். அதிரடியாக பேட் செய்த டேரில் மிட்செல் 31 பந்துகளில் 43, ரச்சின் ரவீந்திரா 34 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தனர். இலங்கை பேட்டிங்கின்போது 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி தந்த ட்ரெண்ட் போல்ட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை பவுலர்களில் ஏஞ்சலோ மேத்யூஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 160 பந்துகளை மீதமிருக்க நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருக்கும் நிலையில், 10 புள்ளிகளுடனும், 0.743 ரன் ரேட்டுடனும் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
உலகக் கோப்பை 2023 தொடரை நியூசிலாந்து அணி வெற்றியுடன் தொடங்கி, வெற்றியுடன் முடித்துள்ளது. இலங்கை அணி 2 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. வங்கதேசம் அணியும் 8 போட்டிகள் விளையாடி 2 வெற்றிகளுடன் 8வது இடத்தில் உள்ளது.
வங்கதேசம் தனது கடைசி போட்டியில் ஆஸ்திரேலியாவை வரும் சனிக்கிழமை எதிர்கொள்கிறது. இதில் தோல்வி அடைந்தால் ரன் ரேட் அடிப்படையில் இலங்கை அணி 8வது இடத்தை பிடித்து சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தகுதி பெறும். எனவே இலங்கை அணியின் தலையெழுத்தை வங்கதேசம் அணி தீர்மானிக்கவுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்