World Cup 2023: பிரதான அணியுடன் களமிறங்கும் ஆஸி.,! கூடுதல் ஸ்பின்னருடன் விளையாடும் தென் ஆப்பரிக்கா டாஸ் வென்று பேட்டிங்
Nov 16, 2023, 01:50 PM IST
ஆஸ்திரேலியா வெற்றி கூட்டணியாக இருந்த பிரதான அணியுடன் களமிறங்கும் நிலையில், தென் ஆப்பரிக்கா அணி கூடுதல் ஸ்பின்னராக தப்ரைஸ் ஷம்சியை சேர்த்துள்ளது.
உலகக் கோப்பை 2023 இரண்டாவது அரையிறுதி போட்டி ஆஸ்திரேலியா - தென் ஆப்பரிக்கா அணிகளுக்கு இடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பரிக்கா அணி கேப்டன் டெம்பா பவுமா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
தென் ஆப்பரிக்கா அணியில் கூடுதல் ஸ்பின்னராக தப்ரைஸ் ஷம்சி சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்ட மார்கோ ஜான்சன் அணிக்கு திரும்பியுள்ளார். ஆஸ்திரேலியா அணியில் மார்கஸ் ஸ்டோய்னிஸ், சீம் அபோட் ஆகியோருக்கு பதிலாக கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர்.
இந்த இரு அணிகளுக்கு இடையே லீக் ஆட்டத்தில் தென் ஆப்பரிக்கா அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பரிக்கா, இந்தப் போட்டியிலும் முதல் பேட்டிங்கை செய்யவுள்ளது. அத்துடன் சேஸிங்கில் தடுமாறி வரும் தென் ஆப்பரிக்கா, எதிர்பார்த்தது போல் டாஸ் ஜெயித்து பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
உலகக் கோப்பை 2023 தொடரில் 591 ரன்கள் எடுத்திருக்கும் குவன்டைன் டி காக், அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களின் லிஸ்டில் இரண்டாவது இடத்தில் உள்ளார். அதேபோல் ஆஸ்திரேலியா ஸ்பின்னரான ஆடம் ஸாம்பா 22 விக்கெட்டுகள் எடுத்த அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்கள் லிஸ்டில் இரண்டாம் இடத்தில் உள்ளார். பேட்டிங்கில் தென் ஆப்பரிக்கா வீரரும், பவுலிங்கில் ஆஸ்திரேலியா வீரரும் டாப் இடத்தில் இருப்பது இரு அணிகளும் சாதகமான விஷயமாகவே அமைந்துள்ளது.
16 ஆண்டுகள் கழித்து அரையிறுதி போட்டியில் மீண்டும் ஆஸ்திரேலியா - தென் ஆப்பரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன. ஏற்கனவே இரண்டு முறை தென் ஆப்பரிக்கா அணியை அரையிறுதியில் இரண்டு முறை வீழ்த்தியிருக்கும் ஆஸ்திரேலியா, ஹாட்ரிக் வெற்றியை பெறுவதற்கான முழு முயற்சியில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் இரண்டு முறை தோல்வியால் நாக்அவுட் ஆகி ஏமாற்றம் அடைந்திருக்கும் தென் ஆப்பரிக்கா இந்த முறை அடிபட்ட புலியாக பாய காத்திருக்கிறது. எனவே பழைய வரலாற்றை அந்த அணி மாற்றி அமைக்குமா என்பதை பார்க்கலாம்
இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் விவரம்
ஆஸ்திரேலியா: ட்ராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஸ்சேன், ஜோஷ் இங்கிலிஷ் (விக்கெட் கீப்பர்), கிளென் மேக்ஸ்வெல், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹசில்வுட்ம
தென் ஆப்பரிக்கா: குவன்டைன் டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), ராஸி வேன்டர் டுசென், ஐடன் மார்கரம், ஹென்ரிச் காஸ்சன், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சென், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்