World Cup 2023 Final: அதிரடி தொடக்கம் தந்த ரோஹித்! கோலி - கேஎல் ராகுல் நிதான பார்ட்னர்ஷிப்
Nov 19, 2023, 03:25 PM IST
அதிரடியான தொடக்கத்தை தந்துவிட்டு ரோஹித் ஷர்மா அவுட்டாக, விக்கெட் சரிவை தடுக்கும் விதமாக விராட் கோலி - கேஎல்ராகுல் இணைந்து நிதான ஆட்டத்தை கடைப்பிடித்து வருகின்றனர்.
உலகக் கோப்பை 2023 தொடரின் இறுதிப்போட்டி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. சுமார் 1.30 லட்சம் பார்வையாளர்கள் இந்த போட்டியை நேரில் காண்கின்றனர்.
இதில் டாஸ் வென்ற அணி ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இரு அணிகளும் கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியுடன் களமிறங்கியுள்ளன.
இதையடுத்து இந்திய அணிக்கு வழக்கம்போல் அதிரடியான தொடக்கத்தை தந்துள்ளார் கேப்டன் ரோஹித் ஷர்மா. ஆரம்பத்தில் இருந்தே பவுண்டரி, சிக்ஸர் என ரன்குவிப்பில் ஈடுபட தொடங்கினார்.
இளம் பேட்ஸ்மேனான சுப்மன் கில் 4 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில், ரோஹித் ஷர்மா தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்தார். அவருடன் கோலியும் இணைந்து ரன் வேட்டையில் ஈடுபட்டார். இதனால் அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
ஆட்டத்தின் 6.2 ஓவரில் இந்தியா 50 ரன்களை கடந்தது. இதைத்தொடர்ந்து பவர்ப்ளே ஓவரிலியே ஸ்பின்னரான மேக்ஸ்வெல்லை பவுலிங் செய்ய அழைத்தார் பேட் கம்மின்ஸ். அவரது ஓவரிலும் பவுண்டரி, சிக்ஸர் என பறக்கவிட்டார் ரோஹித் ஷர்மா.
பிரதான பவர்ப்ளேயான ஆட்டத்தின் 10வது ஓவரை மேக்ஸ்வெல் வீச அந்த ஓவரில் சிக்ஸர், பவுண்டரியை அடித்த ரோஹித் ஷர்மா, இரண்டாவதாக சிக்ஸருக்கு முயற்சித்து அவுட்டானார். ரோஹித் ஷர்மா 31 பந்துகளில் 47 ரன்கள் அடித்து வெளியேறினார். அவர் தனது இன்னிங்ஸில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளை அடித்தார்.
இதன் பின்னர் வந்த ஷ்ரேயாஸ் ஐயர் பவர்ப்ளே ஓவரின் கடைசி பந்தை பவுண்டரியுடன் முடித்தார். 10 ஓவர் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்தது.
ஆட்டத்தின் 11வது ஓவரை கம்மின்ஸ் வீச, அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் 4 ரன்கள் எடுத்திருந்த ஷ்ரேயாஸ் எதிர்பாராத விதமாக விக்கெட் கீப்பர் இங்கிலிஸ் வசம் சிக்கினார். இதனால் டாப் மூன்று விக்கெட்டுகளை இழந்த இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
விக்கெட் சரிவை தடுக்கும் விதமாக விராட் கோலி - கேஎல் ராகுல் ஆகியோர் நிதான ஆட்டத்தை கடைப்பிடித்துள்ளனர். இருவரும் இணைந்து பொறுமையாக பேட் செய்து பார்ட்னர்ஷிப் அமைத்து வருகின்றனர். 16 ஓவர் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 34, கேஎல் ராகுல் 10 ரன்களுடன் பேட் செய்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்