களத்தில் எதிரணி பவுலர்களை நிலைகுலைய செய்யும் புயல்..அதிரடி மன்னன் வீரேந்தர் சேவாக் பிறந்தநாள்
Oct 20, 2024, 06:20 AM IST
எந்த மாதிரியான மைதானமாக இருந்தாலும் சரி, எவ்வாறான ஆடுகளமாக இருந்தாலும் சரி என குறி என்பது ஒன்றுதான், அது மிரட்டல் அடி தான் என்கிற பாணியை கடைசி வரை பின்பற்றி களத்தில் எதிரணி பவுலர்களை நிலைகுலைய செய்யும் புயலாக இருந்தவர் அதிரடி மன்னன் வீரேந்தர் சேவாக்
இந்திய கிரிக்கெட் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களில் தனக்கென அழியா புகழும், மற்ற அணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் புயலாகவும் களத்தில் இருந்தவர் வீரேந்தர் சேவாக். இந்தியாவுக்காக மூன்று வகை கிரிக்கெட்டில் 1999 முதல் 2013 வரை 14 ஆண்டுகள் விளையாடிய இவர், இந்திய அணி உச்சக்கட்ட ஆதிக்கம் செலுத்தியபோது அணியில் இடம்பிடித்த வீரராக இருந்துள்ளார்.
வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இந்திய அணி ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டி20 போட்டிகளில் வென்ற உலகக் கோப்பையின் போதும், டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இடம் பிடித்தபோதும் அணியில் இடம்பிடித்த முக்கிய வீரராக இருந்துள்ளார்.
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக அணியில் அறிமுகமாகி, வரலாற்றில் சிறந்த ஓபனிங் பேட்ஸ்மேனாக தன்னை தக்கவமைத்து கொண்டவராக இருந்துள்ளார் சேவாக். இவர் இந்திய அணியில் இருந்த காலகட்டத்தில் எந்த அணியை சேர்ந்த ஸ்டார் பவுலர்களாக இருந்தாலும் தனது அதிரடியால் பந்தை தொலைப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் தூக்கத்தையும், நிம்மதியையும் தொலைப்பவராக இருந்துள்ளார்.
சேவாக் பற்றி சுவாரஸ்ய விஷயங்கள்
வீரேந்தர் சேவாக் இயல்பாகவே இடது கை பழக்க உடையவர். ஆனால் வலது கையில் அவர் பேட் செய்வதற்கு பின்னணி காரணமாக, சேவாக்கின் தந்தை இடது கை பேட்ஸ்மேன்களுக்கான பேட் வாங்கி தராமல் போனது தான் என கூறப்படுகிறது.
2011 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் போது எண்கள் பொறிக்கப்படாத ஜெர்சி அணிந்து சேவாக் விளையாடியுள்ளார். இதற்கு பின்னணி தனது மனைவி மற்றும் தாயார் எந்த விதத்திலும் அப்செட் ஆககூடாது என்பதற்துதானாம்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்றாவது முச்சதம் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை 7 ரன்களில் கோட்டை விட்டார் சேவாக். இருப்பினும் அதிக முச்சதம் அடித்த இந்திய பேட்ஸ்மேனாக அவர் இருந்து வருகிறார்.
அடிப்படையில் சேவாக் தேர்ச்சி பெற்ற பார்மசிஸ்டாக உள்ளார். ஆனால் இந்த உலகத்தின் பார்வையில் அவர் தெறிக்கவிடும் ஓபனிங் பேட்ஸ்மேனாக இருக்கிறார். கிரிக்கெட் தவிர ஆடை, ரெஸ்ட்ராண்ட், கிரிக்கெட் அகாடமி போன்றவற்றையும் நடத்தி வருகிறார்.
சேவாக் சாதனைகள்
இந்திய கிரிக்கெட்டில் சாதனை மன்னர்களில் ஓபனர் சேவாக்கும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ளார். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் 7,500 ரன்களை கடந்த ஒரே பேட்ஸ்மேனாக உள்ளார்.
278 பந்துகளில் 300 ரன்கள் அடித்து, அதிவேக முச்சதம், ஒரு நாள் கிரிக்கெட்டில் அதி வேக இரட்டை சதம் அடித்த இரண்டாவது பேட்ஸ்மேன், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முச்சதம், மூன்று 290 ப்ளஸ் ஸ்கோர்கள், முச்சதம் அடித்து, 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஒரே வீரர், கேப்டனாக இரட்டை சதமடித்தவர் என பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக சேவாக் இருந்து வருகிறார்.
31 முறை ஆட்ட நாயகன், 5 முறை தொடர் நாயகன் விருதை வென்றிருக்கும் இவர் கிரிக்கெட் வீரர்களின் பஞ்சாங்கம் என்று அழைக்கப்படும் விஸ்டன் கிரிக்கெட்டர் ஆஃப் தி இயரில் இணைந்த முதல் இந்திய வீரராக உள்ளார்.
புயலை கிளப்பும் ஆட்டக்காரர்
பல்வேறு சினிமாக்களில் வில்லன்களிடம் சிக்கி அடிவாங்கும் ஹீரோக்கள் "என்னை அப்படியே கொலை செஞ்சுடு, இல்லேனா இவனை ஏன் உயிரோடு விட்டோம்னு கதருவ" பஞ்ச் பேசுவார். இது அப்படியே சேவாக்குக்கு பக்காவாக பொருந்தும். இன்னிங்ஸ் தொடங்கிய ஆரம்பத்திலேயே சேவாக்கை அவுட் செய்ய தவறிவிட்டால், அப்புறம் அந்த ஆண்டவனே நினைத்தாலும் எதிரணியையும், பவுலர்களையும் காப்பாற்ற முடியாது என்பதை போல் புயலை கிளப்பிவிட்டு செல்லும் வீரராக இருந்து சேவாக் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
டாபிக்ஸ்