HT Cricket Special: முதல் சதத்தை முச்சதம் ஆக்கி வரலாறு படைத்த வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் - இன்று வரை தகர்க்க படாத சாதனை
Mar 01, 2024, 06:45 AM IST
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத வீரராக இருந்து வரும் கேரி சோபர்ஸ், பிறக்கும்போதே இரண்டு கைகளிலும் கூடுதல் விரல்களோடு பிறந்துள்ளார். அதிரடி பேட்ஸ்மேனாகவும், மிரட்டல் பவுலராகவும் அணியின் பல முக்கிய வெற்றிக்கு பங்களிப்பு அளித்துள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டில் கடந்த நூற்றாண்டின் சிறந்த ஆல்ரவுண்டர்களை பட்டியலிட்டால் அதில் கேரி சோபர்ஸ் பெயர் இடம்பெறாமல் இருக்காது. இடது கை பேட்ஸ்மேனாக அதிரடியாக ரன்குவிப்பதிலும் சரி, இடது கை பவுலராக வேகப்பந்து வீச்சு, ஸ்பின் பவுலிங் என இரு வகைகளிலும் பந்து வீசி பேட்ஸ்மேன்களை திணறடிக்க செய்வதிலும் சரி வல்லவனாக திகழ்ந்தவர் சோபர்ஸ்.
உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து சர்வதேச கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக களமிறங்கியபோது இவரது வயது 16 தான். பவுலராக அணியின் நுழைந்து பின்னர் தேர்ந்த பேட்ஸ்மேனாக உருவெடுத்தவர் சோபர்ஸ். அடேங்கப்பா என கூறும் அளவுக்கு தனது பெயரில் ஏராளமான சாதனைகளை செய்திருக்கும் சோபர்ஸ், 66 ஆண்டுகளுக்கு முன்னர் மார்ச் 1ஆம் தேதியான இதே நாளில் நிகழ்த்திய சாதனை கிரிக்கெட் விளையாட்டில் இதுவரை யாராலும் முறியடிக்க முடியாததாக இருந்து வருகிறது.
1958இல் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் வந்த பாகிஸ்தான் அணிக்கு எதிராக சபீனா பார்க் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய சோபர்ஸ், தனது 21வது வயதில் முதல் சதத்தை அடித்தார். இவர் அடித்த இந்த சதம் வழக்கமானதாக இல்லாமல் வரலாறாக மாறியதோடு, இன்றளவும் தனித்துவ சாதனையாக இருந்து வருகிறது.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதமடித்த சோபர்ஸ், அதை முச்சதமாக்கி அமர்க்களத்தையும், ஆச்சர்யத்தையும் வரவழைத்தார். 365 ரன்கள் எடுத்ததோடு, அதற்கு முன்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களான இங்கிலாந்தின் லென் ஹட்டன் 364 ரன்களையும் முறியடித்தார்.
இவரது இந்த சாதனையை மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் வீரரான பிரெய்ன் லாரா 1994இல் முறியடித்து, சோபர்ஸை விட 10 ரன்கள் கூடுதலாக அடித்தார். ஆன்டிகுவாவில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக லாரா 375 ரன்கள் எடுத்தார். இருப்பினும் சோப்ர்ஸின் முதல் சதத்தை, முச்சதமாக மாற்றிய சாதனையை இதுவரை யாராலும் நிகழ்த்தப்படாமலேயே உள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக வரலாற்று சிறப்பு மிக்க அந்த போட்டியில் சோபர்ஸ் 10 மணி நேரம் 14 நிமிடங்கள் களத்தில் பேட் செய்தார். இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 3 விக்கெட் இழப்புக்கு 790 ரன்கள் எடுத்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட நான்காவது அதிகபட்ச ஸ்கோராக இது அமைந்தது. எவ்வித சர்ப்ரைஸும் இல்லாமல் இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் தவிர்க்க முடியாத வீரர்களில் ஒருவராக இருந்து வந்த சோபர்ஸ் தனது சதத்தின் வேட்டையை தொடங்கிய நாள் இன்று.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்