Mitchell Marsh: 450 ரன்கள் அடிப்போம், இந்தியாவை 65 ரன்களுக்கு ஆல்அவுட்டாக்குவோம் - வைரலாகும் மிட்செல் மார்ஷ் பேச்சு!
Nov 17, 2023, 05:21 PM IST
ஐபிஎல் 2023 தொடரின்போது உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் என மிட்செல் மார்ஷ் சொன்ன கணிப்பு நடந்துள்ளது. அவர் சொன்ன மற்றொரு விஷயம் நடக்குமா என்பதை பார்க்க உலகமே ஆவலாக உள்ளது.
உலகக் கோப்பை 2023 தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வரும் ஞாயிற்றுகிழமை நடைபெற உள்ளது.
இந்த போட்டியை காண்பதற்கு உலக கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருந்து வரும் நிலையில், போட்டி குறித்து முன்னாள் வீரர்கள், பிரபலங்களின் கருத்துகள் பேசுபொருளாகவே மாறியுள்ளன.
கடந்த 2003இல் தென் ஆப்பரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் இந்தியாவை 126 ரன்களில் வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் ஆனது. இதைத்தொடர்ந்து 20 ஆண்டுகள் கழித்து இவ்விரு அணிகளும் மீண்டும் இறுதிப்போட்டியில் மோதவுள்ளன.
2003 தோல்விக்கு இந்தியா பழி தீர்க்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், கடந்த ஏப்ரல், மே மாதம் நடைபெற்ற ஐபிஎல் 2023 தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடிய மார்ஷ் போட்கேஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.
இதுகுறித்து மிட்செல் மார்ஷ், "இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியா அணி இறுதிப்போட்டியில் தோல்வியை சந்திக்காத அணியாக தொடர்ந்து இருக்கும். குறிப்பாக இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா 450/2 ரன்கள் அடித்து பின்னர் இந்தியாவை 65 ரன்களுக்கு ஆல் அவுட் செய்யும்" என்றார்,
மிட்செல் மார்ஷ் கூறியது போல் இல்லாமல் லீக் போட்டியில் இந்தியா தான், ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. ஆனாலும் அவர் கணித்தது போல் தற்போது இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டியில் மோதவுள்ளன. இந்த சூழ்நிலையில் இந்தியாவுக்கு எதிராக 450 ரன்கள் அடிப்பது, இந்தியாவை 65 ரன்களில் ஆல்அவுட் ஆக்கும் அளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துமா என்பது எதிர்பார்ப்பாக இருப்பதாக கூறி மார்ஷின் இந்த பழைய பேச்சை வைரலாக்கி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் கணிப்புகள் சில சமயங்களில் எதிரணிக்கு சாதகமாக அமையும் என இந்திய ரசிகர் குறும்பாக தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை 2023 தொடரில் விளையாடிய 10 போட்டிகளிலும் வென்று வெற்றி வாகை சூடி வரும் இந்தியாவுக்கு, உலகக் கோப்பை வெல்வது மட்டுமல்லாமல், 2003இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலகக் கோப்பை பைனலில் தோல்வியுற்றதற்கு பழிதீர்க்கவும் சரியான வாய்ப்பு அமைந்துள்ளது.
டாபிக்ஸ்