ஐபிஎல் 2025: இரண்டு சீசன்களாக தொடர் தோல்வி.. பழிவாங்க காத்திருக்கும் மும்பை! எதிரியின் களத்தில் களமாட இருக்கும் சிஎஸ்கே
Published Apr 20, 2025 06:50 AM IST

ஐபிஎல் 2025: கடைசியாக 2022 சீசனில் தான் சிஎஸ்கேவுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றுள்ளது. தொடர்ச்சியாக சிஎஸ்கேவுக்கு எதிராக நான்கு தோல்விகளை பெற்றிருக்கும் மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கை பொறி வைத்து காத்திருக்கிறது.
ஐபிஎல் 2025 தொடரின் 38வது போட்டி மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ஐபிஎல் போட்டிகளில் எல் கிளாசிக்கோவாக இருந்து வரும் இந்த போட்டி, இரண்டு எதிரி அணிகள் மோதும் போட்டியாக இது அமைந்துள்ளது.
இந்த போட்டி தொடங்கும் முன் மும்பை இந்தியன்ஸ் 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் 7 போட்டிகளில் 2 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் தனது முந்தைய போட்டியில் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதேபோல் சிஎஸ்கே அணி தனது முந்தைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது. இரு அணிகளும் தொடர் தோல்விக்கு பிறகு வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ள நிலையில் அந்த பார்மை தொடர முயற்சிக்கும் என எதிர்பார்க்கலாம்.
இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே சேப்பாக்கத்தில் நடந்த முதல் மோதலில் சிஎஸ்கே வெற்றி பெற்றது. இதனால் மும்பை இந்தியன்ஸ் பழிவாங்க காத்திருக்கும் போட்டியாக அமைந்துள்ளது.
ஸ்டார் வீரர்கள்
மும்பை இந்தியன்ஸை பொறுத்தவரை வெற்றி காம்பினேஷனை அப்படியே தொடரும் என எதிர்பார்க்கலாம். பேட்டிங்கில் ரிக்கெல்டன், ரோஹித் ஷர்மா, சூர்யகுமார், வில் ஜெக்ஸ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா என வலுவான வரிசையில் உள்ளது. பவுலிங்கில் பும்ரா மட்டும் ஜொலித்து வருகிறார். சாண்ட்னர், போல்ட் ஆகியோரும் திருப்பமுனை ஏற்படுத்தும் வீரர்களாக உள்ளார்கள்.
சிஎஸ்கே அணியை பொறுத்தவரை சரியான காம்பினேஷன் இல்லாமல் தவித்து வரும் நிலையில் இந்த போட்டியில் ஏதாவது சர்ப்ரைஸ் மாற்றங்களை எதிர்பார்க்கலாம். டிவால்ட் ப்ரீவிஸ் வருகை அணியின் பேட்டிங் வரிசையை வலுசேர்த்துள்ளது. இருப்பினும் ஆடும் லெவனில் இருப்பாரா என்பது புதிராகவே உள்ளது.
ரச்சின் ரவீந்திரா, ஷிவம் துபே, தோனி ஆகியோர் மட்டுமே பேட்டிங்கில் நல்ல பார்மில் உள்ளார்கள். முந்தைய போட்டியில் களமிறங்கிய ஷேக் ரஷீத் நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளார். பவுலிங்கில் சிறப்பாக செயல்படுகிறது சிஎஸ்கே கலீல் அகமது, நூர் அகமது, பதிரனா, ஜடேஜா ஆகியோர் சிறப்பாகவே செயல்படுகிறார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் இதுவரை
இந்த இரு அணிகளும் இதுவரை 38 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் மும்பை இந்தியன்ஸ் 20, சிஎஸ்கே 18 முறை வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக இரு அணிகளும் மோதிக்கொண்ட போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் கடைசியாக கடந்த 2022 சீசனில் தான் மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கேவுக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளது. எனவே இரண்டு சீசன்களாக சிஎஸ்கேவை வீழ்த்தி பொறி வைத்து காத்திருக்கிறது மும்பை இந்தியன்ஸ்
பிட்ச் நிலவரம்
மும்பை வான்கடே மைதானம் பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியாக இருக்கும். ஆனால் இந்த சீசனில் பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்கும் விதமாக மாறியுள்ளது. பெரிய ஸ்கோர் குவிக்கமுடியாமல் பேட்ஸ்மேன்கள் திணறுகிறார்கள். இருப்பினும் அங்கு நிலவும் பனிப்பொலிவு மாறவில்லை. எனவே டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என தெரிகிறது. ஏனென்றால் இங்கு அணிகள் சேஸிங் செய்யவே விரும்புகின்றன.
ஆடுகளம் ஸ்பின்னர்களுக்கு பெரிதாக உதவாது என்றாலும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நன்கு பவுன்ஸ் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே சரியாக லென்தில் பவுலிங் செய்யும் பவுலர்கள் ஜொலிக்கலாம். மற்றபடி பேட்ஸ்மேன்களுக்கு பந்து மெதுவாக வரும் என்பதால் பெரிய ஷாட்களை கவனமாக ஆட வேண்டும்
இனி எஞ்சியுள்ள 7 போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் குறைந்தது 4, சிஎஸ்கே குறைந்தது 5 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய முடியும். எனவே இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது. எனவே வெற்றியை மட்டும் குறிவைத்து ஒவ்வொரு விஷயத்திலும் சரியான திட்டமிடலுடன் இரு அணிகளும் களமிறங்கும் என எதிர்பார்க்கலாம்.
மும்பை இந்தியன்ஸ் உத்தேச அணி: ரியான் ரிக்கல்டன் (விக்கெட் கீப்பர்), ரோஹித் ஷர்மா, வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நமன் திர், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா, விக்னேஷ் புதூர்/ அஸ்வனி குமார்
சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச அணி: ரச்சின் ரவீந்திரா, ஷேக் ரஷீத், ராகுல் திரிபாதி, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, விஜய் சங்கர், எம்எஸ் தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஜேமி ஓவர்டன்/ டிவால்ட் ப்ரீவிஸ் அன்ஷுல் கம்போஜ், நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பத்திரனா