ஐபிஎல் 2025: சதத்தை மிஸ் செய்த கில்.. பட்லர் அதிரடி பினிஷ்! கொல்கத்தா பவுலர்கள் புரட்டி எடுத்த குஜராத்
Published Apr 21, 2025 09:31 PM IST

ஐபிஎல் 2025: சிறப்பாக பேட் செய்த சுப்மன் கில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 90 ரன்களில் அவுட்டாக் சதத்தை மிஸ் செய்தார். கடைசி நேரத்தில் பட்லர் அதிரடி இன்னிங்ஸை வெளிப்படுத்தி நல்ல பினிஷ் கொடுத்தார். குஜராத் பேட்ஸ்மேன்கள், கொல்கத்தா பவுலர்களை புரட்டி எடுத்து ரன்களை குவித்தனர்.
ஐபிஎல் 2025 தொடரின் 39வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடங்கும் முன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகளுடன் 7வது இடத்தில் உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் 7 போட்டிகளில் 5 வெற்றி, 2 தோல்விகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முந்தைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. குஜராத் டைட்டன்ஸ் தனது முந்தைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது. கொல்கத்தா அணி வெற்றிப்பாதைக்கு திரும்பி புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் அடைவதற்கான போட்டியாக இது அமைந்துள்ளது.
கொல்கத்தா அணியில் ரஹ்மனுல்லா குர்பாஸ் புது வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். குஜராத் டைடட்ன்ஸ் அணியில் கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியுடன் களமிறங்கியுள்ளது.
கொல்கத்தா பவுலிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் அஜிங்கியா ரஹானா பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக சுப்மன் கில் 90, சாய் சுதர்சன் 52 ரன்கள் அடித்துளளனர்.
கொல்கத்தா பவுலர்களில் வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, ஆண்ட்ரே ரசல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர்.
சுதர்சன் - கில் பார்ட்னர்ஷிப்
குஜராத் அணி ஓபனர்களான சாய் சுதர்சன் - சுப்மன் கில் ஆகியோர் அணிக்கு நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். இந்த சீசனில் பேட்டிங்கில் கன்சிஸ்டன்டாக விளையாடி வரும் தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் இந்த போட்டியிலும் தனது பார்மை தொடர்ந்தார். பவர்ப்ளே ஓவர்களில் குஜராத் டைட்டன்ஸ் விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் அடித்தது.
சுதர்சன், கில் என இருவரும் அதிரடி, நிதானம் என கலவையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவ்வப்போது பவுண்டரி, சிக்ஸர்களையும் அடித்தனர். அற்புதமாக பேட் செய்த கில் 34 பந்துகளில் அரைசதத்தை அடித்தார்.
அதேபோல் சாய் சுதர்சனும் சிறப்பாக பேட் செய்து வந்த நிலையில், 33 பந்துகளில் தனது அரைசதத்தை கடந்தார். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்தனர். 36 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த சாய் சுதர்சன் முதல் ஆளாக அவுட்டானார்.
மிஸ்ஸான சதம்
50 ரன்களை கடந்த பிறகு அதிரடிக்கு மாறினார் கில். பவுண்டரி, சிக்ஸர்கள் என விரைவாக ரன்களை குவித்தார். இதனால் அணியின் ஸ்கோரும் விறுவிறு என உயர்ந்தது.
சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கில் 55 பந்துகளில் 90 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். தனது இன்னிங்ஸில் 10 பவுண்டரி, 3 சிக்ஸர்களை அடித்தார் கில். இவர் அவுட்டான பின்னர் வந்த ராகுல் திவாட்டியா டக் அவுட்டாகி வெளியேறினார்.
ஜோஸ் பட்லர் கேமியோ
கடைசி கட்டத்தில் தொடர்ச்சியாக பவுண்டரிகளை கிளியர் செய்த செய்த ஜோஸ் பட்லர் அதிரடி காட்டினார். இதனால் குஜராத் அணிக்கு நல்ல பினிஷிங் அமைந்தது. 8 பவுண்டரிகளை அடித்த பட்லர், 23 பந்துகளில் 41 ரன்கள் அடித்து அவுட்டாகமல் உள்ளார். ஷாருக்கான் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டு 11 ரன்கள் அடித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக உள்ளார்.
கொல்கத்தா பவுலர்களில் பிரதான் ஸ்பின்னர்களான வருண் சக்கரவர்த்தி 4 ஓவரில் 33 ரன்களும், சுனில் நரேன் 4 ஓவர்களில் 36 ரன்களும் விட்டுக்கொடுத்து விக்கெட்டுகள் வீழ்த்தவில்லை.