வங்கதேசத்துக்கு எதிராக முழுமையான வெற்றி..பேட்டிங்கில் சஞ்சு சாம்சன், பவுலிங்கில் பிஷ்னோய் மைல்கல் சாதனை
Oct 12, 2024, 10:49 PM IST
டெஸ்ட் தொடரை தொடர்ந்து, டி20 தொடரிலும் வங்கதேசத்துக்கு எதிராக முழுமையான வெற்றியை இந்தியா பெற்றுள்ளது. பேட்டிங்கில் சஞ்சு சாம்சன், பவுலிங்கில் பிஷ்னோய் மைல்கல் சாதனை புரிந்துள்ளனர்.
இந்தியா சுற்றுப்பயணம் வந்திருக்கும் வங்கதேசம் அணி 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடியுள்ளது. இதில் டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கிலும், டி20 தொடரில் 3-0 என்ற கணக்கிலும் முழுமையாக வெற்றி பெற்றுள்ளது.
ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற கடைசி போட்டியில் வங்கதேசம் ஆறுதல் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய பேட்ஸ்மேன்களின் ஈவு இரக்கமற்ற அதிரடி ஆட்டத்தில் அடிபணிந்தது. வங்கதேச ஆல்ரவுண்டர் மஹ்மதுல்லா கடைசி டி20 போட்டியாக இது அமைந்த நிலையில், அவருக்கு அணியினர் வெற்றியை பரிசாக தர முடியாமல் போயுள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்குக்கு பதிலாக ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் சேர்க்கப்பட்டார். வங்கதேச அணியிலும் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.
இந்தியா வரலாற்று சாதனை
இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா, வங்கதேச பவுலர்களின் பந்து வீச்சை மைதானத்தின் அனைத்து திசைகளிலும் புரட்டி எடுத்தனர். இதனால் 20 ஓவரில் 297 ரன்கள் குவித்து, டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த அணி என்ற சாதனை புரிந்தது.
இந்திய அணியின் ஓபனரும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான சஞ்சு சாம்சன் தனது முதல் டி20 சதத்தை அடித்தார். 47 பந்துகளில் 111 ரன்கள் எடுத்த நிலையில் சாம்சன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
சாம்சனுடன் இணைந்து அதிரடி கோதாவில் கலக்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 75 ரன்கள் அடித்தார். அதேபோல் கடைசி கட்ட பினிஷிங்காக ஹர்திக் பாண்டியா 47, ரியான் பராக் 34 ரன்கள் என வெளுத்து வாங்கினர்.
வங்கதேசம் சேஸிங்
இந்தியாவின் ஸ்கோர் சேஸ் செய்ய இன்னொரு வரலாறு நிகழ்த்த வேண்டும் என்கிற நிலையில் களமிறங்கிய வங்கதேசம் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக டவுஹித் ஹிர்தோய் 63, லிட்டன் தாஸ் 42 ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணியில் 7 பேர் பவுலிங் செய்தனர். இதில் ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மயங்க் யாதவ் 2 விக்கெட்டை கைப்பற்றினார். வாஷிங்கடன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
சூர்யகுமார் யாதவ் - கம்பீர் கூட்டணியின் இரண்டாவது கோப்பை
கடந்த ஜூலை மாதம் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் 3 போட்டிகளிலும் முழுமையாக வெற்றி பெற்றது சூர்யகுமார் - இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் கூட்டணி.
இதைத்தொடர்ந்து தற்போது வங்கதேசம் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரிலும் முழுமையாக வெற்றி பெற்று இந்த கூட்டணி தொடர்ச்சியாக இரண்டாவது கோப்பையை தட்டி தூக்கியுள்ளது.
இந்த போட்டியில் டி20 கிரிக்கெட்டில் தனது 50வது விக்கெட்டை கைப்பற்றினார் ஸ்பின்னரான ரவி பிஷ்னோய். தனது 33வது போட்டியில் இந்த மைல்கல்லை எட்டியிருக்கும் ரவி பிஷ்னோய், அதி வேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர்களில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
அதேபோல் 24 வயதில் 37 நாள்களில் இதை நிகழ்த்தியிருக்கும் பிஷ்னோய், இளம் வயதில் அதிவேகமாக 50 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பவுலர் ஆகியுள்ளார்.
சஞ்சு சாம்சன் இந்த போட்டியில் சதமடித்தன் மூலம் டி20 போட்டிகளில் சதமடித்த முதல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற மைல்கல் சாதனை புரிந்துள்ளார்.
டாபிக்ஸ்