IndvsZim: அபிஷேக் சர்மாவின் எழுச்சி.. 2-வது டி20 போட்டியில் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது
Jul 07, 2024, 11:09 PM IST
IndvsZim: அபிஷேக் சர்மாவின் எழுச்சியால், 2-வது டி20 போட்டியில் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.
IndvsZim: டி20 உலகக் கோப்பையை வென்ற கையோடு, இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து 5 டி20 மேட்ச்களில் விளையாடி வருகிறது.
இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதிய 2ஆவது டி20 போட்டி, ஜிம்பாப்வே நாட்டின் தலைநகர் ஹராரேயில் இன்று நடந்தது . இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
முதலில் பேட்டிங் செய்து 234 ரன்கள் குவித்த இந்திய அணி:
அதன்படி, முதலில் இந்திய அணி ஆடியது. ஆரம்பத்தில் இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக களமிறங்கிய சுப்மன் கில்லும் அபிஷேக் சர்மாவும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் துரதிர்ஷ்டவசமாக சுப்மன் கில், இரண்டு ரன்கள் எடுத்தபோது, முசார்பானியின் பந்தில், பென்னிட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அவருடன் ஜோடியாக களமிறங்கிய அபிஷேக் சர்மா முதல் அரைசதத்தைப் பூர்த்தி செய்யும் வரை நிதானமான ஆட்டத்தை ஆடினார். அவருக்கு பார்ட்னராக மறுமுனையில் ருதுராஜ் கெய்க்வாட் ஈடுகொடுத்து ஆடிக்கொண்டு வந்தார். அபிஷேக் சர்மா முதல் 50 ரன்களைக் கடந்ததும் அதிரடியாக ஆடத் தொடங்கினார். அபிஷேக் சர்மா, 46 ரன்களில் 100 ரன்கள் எடுத்து புதிய சாதனையைப் படைத்தார். அதாவது முதல் 33 பந்துகளில் அரைசதம் அடித்த அபிஷேக், வெறும் 13 பந்தில் சதமடித்தார். முதல்முறையாக டி20 போட்டியில் இன்று களமிறங்கிய அபிஷேக் சர்மா தனது முதல்போட்டியிலேயே சதம் அடித்ததுமட்டுமின்றி, குறைவான பந்துகளில் சதம் அடித்த என்ற வரலாற்றைப்படைத்த மூன்றாவது வீரர் ஆனார். இதில் 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடக்கம் ஆகும். ஆனால், நூறாவது ரன்னுக்கு அடுத்து ஒரு ரன்கூட அவரை ஒரு ரன்கூட எடுக்கவிடக் கூடாது எனும் வகையில் பந்துவீசிய, ஜிம்பாப்வே வீரர் மசகட்ஸாவின் பந்தில், மயெரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
மறுபுறம் நிதானமாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் அரை சதத்தைப் பதிவு செய்தார்.
அபிஷேக் சர்மா அவுட் ஆனவுடன் களமிறங்கிய ரிங்கு சிங்கும் ஆரம்பம் முதல் நிதானமாக ஆடினார். கடைசி ஓவர் வரை ருதுராஜ் கெய்க்வாட்டும், ரிங்கு சிங்கும் நிதானமாக ஆடி, 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணியின் ஸ்கோரை 2 விக்கெட் இழப்புக்கு, 234 ரன்கள் என உயர்த்தினர்.
இதில் ருதுராஜ் கெய்க்வாட் 47 ரன்களில் 77 ரன்கள் எடுத்தார். ருதுராஜின் ஆட்டத்தில் 11 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் அடங்கும். ரிங்கு சிங், 48 ரன்கள் எடுத்தார். இதில் இரண்டு பவுண்டரிகளும், 5 சிக்ஸர்களும் அடக்கம்.
ஜிம்பாப்வே அணியின் சார்பில் பிளெஸிங் முசார்பானி ஒரு விக்கெட்டும், வெலிங்டன் மசகட்ஸாவின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
சேஸிங்கில் கோட்டைவிட்ட ஜிம்பாப்வே அணி:
அதனைத்தொடர்ந்து 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி ஆரம்பம் முதலே திணறியது.
ஜிம்பாப்வே அணியின் சார்பில் தொடக்க வீரராக களமிறங்கிய இன்னசென்ட் கையா 4 ரன்கள் எடுத்தபோது, முகேஷ் குமாரின் பந்தில் அவுட்டானார்.
அடுத்து அவருடன் ஆடிவந்த வெஸ்லி மத்ஹெவெரெ நிதானமாக ஆடி, 43 ரன்கள் எடுத்தபோது, ரவி பிஸ்னோயின் பந்தில் கிளீன் போல்டானார். மூன்றாவது வீரராக களமிறங்கிய பிரெய்ன் பென்னட், 26 ரன்கள் எடுத்தபோது இந்திய வீரர் முகேஷ் குமாரின் பந்தில் ஸ்டெம்ப் தெறிக்க க்ளீன் போல்டு ஆனார்.
அடுத்து நான்காவதாக களமிறங்கிய தியான் மயிர்ஸ் ரன் எதுவும் எடுக்காமல், ஆவேஷ் கானின் பந்தில், ரிங்கு சிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஐந்தாவதாக களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராஸா, நான்கு பந்துகளுக்கு 4 ரன்கள் எடுத்தபோது அவுட்டானார்.
அடுத்து வந்த ஜானாதன் கேம்பெல் 10 ரன்களும், கிளிவ் மதண்டே ரன் எதுவும் எடுக்காமலும் அவுட்டாகினர். அடுத்து வந்த வெலிங்டன் மசகட்ஸா ஒரு ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
ஆனால், லுயிக் ஜோங்வே நிதானமாக ஆடி, 33 ரன்கள் எடுத்தபோது அவுட்டானார். மேலும், பிளெஸிங் முஸாரபானி இரண்டு ரன்களுடன் எடுத்தபோது அவுட்டானார். மொத்தத்தில் ஜிம்பாப்வே அணி 18.4 ஓவர்கள் முடிவில் வெறும் 134 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதன்மூலம் 100 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி தோல்வியைத் தழுவியது.
மேலும் தனது முதல் டி20 போட்டியிலேயே சதம் அடித்த இந்திய வீரர், அபிஷேக் சர்மாவுக்கு ‘ஆட்டநாயகன்’விருது வழங்கப்பட்டது.
டாபிக்ஸ்