Ind vs Zim 4th T20: ஜெய்ஸ்வால் மிரட்டல் அடி..! விக்கெட் இழப்பின்றி வெற்றி - கேப்டனாக முதல் தொடரில் பாஸ் ஆன கில்
Jul 13, 2024, 07:51 PM IST
முக்கியத்துவம் மிக்க இந்த போட்டியில் ஓபனரான ஜெயஸ்வால் தொடக்கத்தில் இருந்தே மிரட்டல் அடி அடித்து ரன் குவிப்பில் ஈடுபட விக்கெட் இழப்பின்றி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. கேப்டனாக முதல் தொடரில் பாஸ் ஆகியுள்ளார் சுப்மன் கில்.
ஜிம்பாப்வே - இந்தியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நான்காவது டி20 போட்டி ஹராரே ஸ்போர்ஸ்ட் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை விகித்தது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்தியா தொடரை கைப்பற்றும். அதே நேரத்தில் ஜிம்பாப்வே அணியும் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை இழக்காமல் தப்பிக்க முடியும். எனவே இரு அணிகளுக்கு இது முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக அமைந்திருந்தது.
இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கானுக்கு பதிலாக சிஎஸ்கே அணியின் இளம் பவுலர் துஷார் தேஷ்பாண்டே அறிமுக வீரராக களமிறங்கினார்.
ஜிம்பாப்வே ரன் குவிப்பு
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சிகந்தர் ராசா 46, தடிவானாஷே மருமணி 32, வெஸ்லி மாதேவேரே 25 ரன்கள் அடித்தார்கள்.
இந்திய பவுலர்களில் கலீல் அகமது 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். துஷார் தேஷ்பாண்டே, வாஷிங்டன் சுந்தர், அபிஷேக் ஷர்மா, ஷிவம் துபே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
இந்தியா சேஸிங்
153 ரன்கள் என்பது இந்த ஆடுகளத்தில் சவாலான இலக்காக இருந்த நிலையில், சேஸிங்கில் களமிறங்கிய இந்தியா 15.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 10 விக்கெட்டுகள் 28 பந்துகள் மீதமிருக்க இந்தியா வெற்றி பெற்றது. அத்துடன் 5 போட்டிகளில் கொண்ட தொடரில் மூன்று போட்டிகளில் வென்று தொடரையும் கைப்பற்றியது.
முதல் போட்டியில் தோல்வியை தழுவிய இந்தியாவுக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது.
ஜெய்ஸ்வால் - கில் அதிரடி
இந்திய அணியில் ஓபனர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் - சுப்மன் கில் ஆகியோர் தொடக்கத்தில் இருந்த அதிரடியாக பேட் செய்தனர். அதிலும் ஜெயஸ்வால் அடுத்தடுத்து பவுண்டரிகளாக அடித்து வெளுத்து வாங்கினார்.
ஜெய்ஸ்வால் 29 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்தார். அப்போது அணியின் ஸ்கோர் 65 என இருந்தது.
ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்தவுடன், தனது அதிரடி வேட்டையை தொடங்கி கில் தன் பங்குக்கு பவுண்டரி சிக்ஸர்கள் என அடித்து துவம்சம் செய்தார். கில் 35 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். அத்துடன் அடுத்தடுத்து இரண்டு அரைசதங்களை அடித்துள்ளார்.
கடைசி வரை அவுட்டாகாமல் இருந்த ஜெய்ஸ்வால் 52 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார். தனது இன்னிங்ஸில் 13 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடித்தார்.
அதேபோல் மற்றொரு ஓபனரான சுப்மன் கில் 38 பந்துகளில் 57 ரன்கள் அடித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக உள்ளார். தனது இன்னிங்ஸில் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடித்தார். கேப்டனாக களமிறங்கிய தனது முதல் தொடரை வென்று சாதித்துள்ளார் சுப்மன் கில்.
இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி இதே மைதானத்தில் நாளை மாலை 4.30 மணிக்கு தொடங்கவுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்