World Cup 2023: 9 பவுலர்களை பயன்படுத்திய இந்தியா - தொடர்ச்சியாக 9வது வெற்றி! நெதர்லாந்து 160 ரன்களில் தோல்வி
Nov 12, 2023, 10:16 PM IST
அணியின் வெற்றி காம்பினேஷனை மாற்றாமல் விளையாடிய இந்தியா, நெதர்லாந்துக்கு எதிராக இன்றையே போட்டியில் பரிசோதனை முயற்சியாக கில், கோலி, ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர்களையும் சில ஓவர்கள் பந்து வீச வைத்தனர்.
உலகக் கோப்பை தொடரின் 45வது மற்றும் கடைசி லீக் போட்டி இந்தியா - நெதர்லாந்து அணிகளுக்கு இடையே பெங்களுருவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்த அணி வெற்றி காம்பினேஷனை மாற்றாமல் கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியுடன் இன்றைய போட்டியிலும் களமிறங்கியது. நெதர்லாந்து அணியும் கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியுடன் விளையாடியது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 410 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர்128 ரன்கள் அடித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக உள்ளார். கேஎல் ராகுல் 102 ரன்கள் அடித்து அவுட்டானார். 62 பந்துகளில் சதமடித்த கேஎல் ராகுல், உலகக் கோப்பை போட்டிகளில் அதிவேக சதமடித்த வீரர் என்ற சாதனை புரிந்தார்.
இவர்கள் இருவரும் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 208 ரன்கள் பார்டனர்ஷிப் அமைத்தனர். கடைசி 10 ஓவரில் இந்தியா 126 ரன்கள் எடுத்தது.
ரோஹித் ஷர்மா 61, சுப்மன் கில் 51, விராட் கோலி 51 ரன்கள் எடுத்தனர். நெதர்லாந்து பவுலர்களில் ரோலோஃப் வான் டெர் மெர்வே, பாஸ் டி லீட், பால் வான் மீகெரென் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து சேஸிங்கில் களமிறங்கிய நெதர்லாந்து அணி 47.5 ஓவரில் 250 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டாகியுள்ளது. இந்திய அணியில் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தவிர மீதமிருக்கும் 9 பேர் பவுலிங் செய்தனர். இதில் ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
பும்ரா, சிராஜ், ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். பவுலிங்கில் நல்ல பார்மில் இருந்து வந்த முகமது ஷமி இன்றைய போட்டியில் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.
நெதர்லாந்து பேட்ஸ்மேன்களில் தேஜா நிடமானுரு அதிரடியாக பேட் செய்து 39 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து அவுட்டானார். இவர் தனது இன்னிங்ஸில் 6 சிக்ஸர்கள் பறக்கவிட்டார். இவருக்கு அடுத்தபடியாக சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 45, கொலின் அக்கர்மேன் 35, மேக்ஸ் ஓ டவுட் 30 ரன்கள் எடுத்தனர்.
சதமடித்து 128 ரன்கள் அடித்த ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்