India 1st Innings Score: 2வது நாளில் மளமளவென விக்கெட்கள் காலி.. இந்தியா முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் இதான்!
Sep 20, 2024, 10:47 AM IST
IND vs BAN 1st Test: ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் 2வது நாளை 339 ரன்னிலிருந்து தொடங்கினர். சற்று நேரத்திலேயே டஸ்கின் பந்துவீச்சில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார் ஜடேஜா.
இந்தியா-வங்கதேச அணிகள் இடையேயான ஆட்டத்தின் 2வது நாளில் குறைவான ரன்களையே இந்தியா எடுத்தது. அஸ்வினும் ஆட்டமிழக்க, 91.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 376 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, வங்கதேசம் தனது முதல் இன்னிங்ஸை தொடங்குகிறது. அஸ்வின் 113 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜடேஜா ஆட்டமிழக்க ஆகாஷ் தீப் களம் புகுந்தார். வந்த வேகத்தில் அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை விளாசினார். 4 பவுண்டரிகளை விளாசிய அவர் 17 ரன்கள் எடுத்திருந்தபோது ஒரு பந்தை சிக்ஸருக்கு தூக்கி அடிக்க முயன்று கேட்ச் ஆனார். பின்னர், அஸ்வினும் அதே பாணியில் ஆட்டமிழக்க, பும்ராவும் ஸ்லிப்பில் கேட்ச் ஆனார்.
முன்னதாக, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது பங்களாதேஷ். இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்களை எடுத்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரை சதம் விளாசி அசத்தினார். ஆனால், கேப்டன் ரோகித் சர்மா 6 ரன்களில் நடையைக் கட்டி அதிர்ச்சி கொடுத்தார். சுப்மன் கில் ரன் எடுக்காமலும், விராட் கோலி 6 ரன்னிலும் ஆட்டமிழந்தார். கொடூரமான கார் விபத்துக்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வந்த ரிஷப் பந்த் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
யஷஸ்வி அரை சதம்
கே.எல்.ராகுல், 16 ரன்களில் எடுத்தார். பின்னர் வந்த அஸ்வின் அதிரடி காட்டி சதம் விளாசினார். மறுமுனையில் ஜடேஜாவும் நிதானமாக விளையாடி அரை சதம் விளாசினார். மொத்தம் 86 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். அஸ்வின் 112 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பந்த் ஆகிய இரண்டு மிகவும் உற்சாகமான இடது கை வீரர்கள் மட்டுமல்ல, அவர்கள் தாக்குதலை எதிரணிக்கு எடுத்துச் செல்ல விரும்பினர். இருவரும் அரை சதம் விளாசுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிஷப் பந்த் அவுட்டானார். ஆனால், யஷஸ்வி நிதானமாக விளையாடி 95 பந்துகளில் அரை சதம் பதிவு செய்தார். இது அவருக்கு டெஸ்டில் 5வது அரை சதம் ஆகும். டெஸ்டில் 3 சதங்களையும் அவர் பதிவு செய்திருக்கிறார்.
அஸ்வினும், ஜடேஜாவும் இணைந்து முதல் நாளில் 195 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் குவித்தனர்.
தினேஷ் கார்த்திக் கூறியது என்ன?
"அவர்கள் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. அவர்களிடம் உள்ள அனுபவம், அவர்கள் தொடங்கிய விதம், அஸ்வின் விளையாடிய ஷாட்கள், முதலில் பேக்ஃபுட் பஞ்ச்... ஜடேஜா மிட் ஆனுக்கு மேல் சென்று பவுண்டரிகளை அடித்தார். இவை சிறிய விஷயங்கள், டெஸ்ட் கிரிக்கெட் எவ்வாறு செயல்படுகிறது என்பதை (அவர்கள்) புரிந்துகொள்கிறார்கள்" என்று தினேஷ் கார்த்திக் கிரிக்பஸ்ஸிடம் கூறினார்.
இந்திய வீரர்கள் சுறுசுறுப்பான கிரிக்கெட் வீரர்களாக இருந்தபோது தங்களுக்கு உரிய மதிப்பை அரிதாகவே பெற்றுள்ளனர் என்றும், அஸ்வின் மற்றும் ஜடேஜாவுக்கும் இது பொருந்தும் என்றும் தினேஷ் கார்த்திக் சுட்டிக்காட்டினார்.
"நம்மிடம் ஆல்ரவுண்டர்கள் உள்ளனர். அக்சர் படேல் விளையாடவில்லை, அது புரிந்துகொள்ளத்தக்கது. சில நேரங்களில் மக்கள் அவர்கள் இனி இல்லாதபோது மட்டுமே மதிக்கிறார்கள் என்று நான் உணர்கிறேன், மேலும் இந்த இரண்டு நபர்களும் அவர்கள் முடித்தவுடன் மிகவும் மதிக்கப்படுவார்கள். அது விரைவில் வராது என்று நம்புகிறோம். நாங்கள் அனைவரும் ஆல்ரவுண்டர்களைப் பற்றி பேசுகிறோம், இந்த இருவரும் இந்தியாவுக்கு தனித்துவமானவர்கள்" என்று கார்த்திக் கூறினார்.
டாபிக்ஸ்