IND vs SA Preview: யார் பலசாலி? டாப் இடத்தை பிடிக்க இந்தியா - தென் ஆப்பரிக்கா பலப்பரிட்சை
Nov 05, 2023, 05:45 AM IST
டாப் இரண்டு இடங்களில் இருக்கும் இரு அணிகளுக்கு இடையிலான மோதலில் வெற்றி பெறும் அணி முதல் இடத்தை பிடிக்கும். இன்றைய போட்டி இந்தியா, தென் ஆப்பரிக்கா என இரு அணிகளும் தங்களது பலத்தை நிருபிக்கும் விதமாக இருக்கும்.
உலகக் கோப்பை 2023 தொடரின் 37வது போட்டி இந்தியா - தென் ஆப்பரிக்கா அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் இன்று நடைபெறுகிறது. பகலிரவு ஆட்டமான இந்தப் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியா இதுவரை விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் அணியாகவும், அரையிறுதிக்கு தகுதி பெற்ற ஒரே அணியாகவும் உள்ளது. மீதமுள்ள மூன்று இடங்களுக்கு மற்ற அணிகளுக்குள்ளே மிகப் பெரிய போட்டியே நிலவி வருகிறது. தென் ஆப்பரிக்கா அணியும் கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை உறுதிபடுத்தியுள்ளது.
இந்த சூழிலில் இந்தியா - தென் ஆப்பரிக்கா அணிகள் மோத இருக்கும் நிலையில், நாக்அவுட் போட்டிக்கு முன்னர் ஒத்திகையாகவே இந்தப் போட்டி அமைந்துள்ளது. இந்திய அணியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தொடரிலிருந்து விலகிவிட்ட நிலையில், பவுலிங்கில் அவரது இடத்தை சிறப்பாக நிரப்பியுள்ளார் முகமது ஷமி. அதேவேளையில் பேட்டிங்கில் அந்த இடத்தை நிரப்புவதற்காக வந்த சூர்யகுமார் யாதவ் தனது அதிரடியான பாணி ஆட்டத்தால் பெரிய இன்னிங்ஸை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
பேட்டிங்கில் ஷ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில் ஆகியோரின் பார்ம் பற்றி கேள்வி எழுந்த நிலையில், கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டம் மூலம் இருவரும் அதை சரி செய்தார்கள்.
பவுலிங் தற்போது இருக்கும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு ஸ்பின்னர்கள் காம்போ இந்தியாவுக்கு நன்கு கைகொடுக்கும் விதமாக உள்ளது. அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டதால் முக்கிய பவுலர்களான பும்ரா அல்லது சிராஜ் ஆகியோரில் ஒருவருக்கு ஓய்வு அளித்து விட்டு சோதனை முயற்சியாக அஸ்வினை அணிக்கு மீண்டும் கொண்டு வரவும் வாய்ப்பு உள்ளது. இதை செய்யாத பட்சத்தில் வெற்றி கூட்டணியனுடனே மீண்டும் களமிறங்கி வெற்றி பயணத்தை தொடரலாம்.
தென் ஆப்பரிக்காவை பொறுத்தவரை பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்படும் அணி முதல் பேட்டிங்கில் மிரட்டலாகவும், சேஸிங்கில் தடுமாறியும் வருகிறது. அதேபோல் பவுலர்களையும் ஆடுகளம் மற்றும் சுழலை பொறுத்து மாற்றி அமைத்து வருகிறது.
அந்த வகையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இரண்டு ஸ்பின்னர்களை களமிறக்கவும் வாய்ப்பு உள்ளது. உலகக் கோப்பை 2023 தொடரின் டாப் ரன் ஸ்கோரர் குவன்டைன் டி காக் தென் ஆப்பரிக்கா ஓபனிங் பேட்ஸ்மேனாக இருப்பதுடன், இந்தியாவுக்கு எதிராக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரராக இருந்துள்ளார்.
எனவே இந்தியாவுக்கு சரியான சவால் மிக்க அணியாகவே தென் ஆப்பரிக்கா உள்ளது. இந்தியா சேஸிங்கில் 5, முதல் பேட்டிங்கில் 2 வெற்றிகளை பெற்றுள்ளது. தென் ஆப்பரிக்கா முதல் பேட்டிங்கில் 5, சேஸிங்கில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியை பெற்றுள்ளது. சேஸிங்கில் வென்ற போட்டியிலும் கடைசி விக்கெட் வரை சென்று த்ரில் வெற்றி பெற்றது.
இதை வைத்து பார்க்கையில் இன்றைய போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என தெரிகிறது. தென் ஆப்பரிக்கா அணி சேஸ்ங்கில் நெருக்கடியை சந்தித்து வருவதால் இந்தியா இதை சாதமாக்கி கொள்ள வாய்ப்பும் இருக்கிறது.
அதேசமயம் சேஸிங்கில் அதிக வெற்றிகளை குவித்திருக்கும் இந்தியா, தனது பவர்புல் பவுலிங் அட்டாக் மூலம் முதல் பவுலிங் செய்து தென் ஆப்பரிக்காவை கட்டுப்படுத்தவும் செய்யலாம்.
பிட்ச் நிலவரம்
ஈடன் கார்டன் மைதானம் வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுக்க உதவினால், பேட்ஸ்மேன்களை ரன்அடிக்க விடாமல் கட்டுப்படுத்தும் விதமாக ஸ்பின்னர்கள் பந்து வீச்சு எடுபடும். இங்கு நடைபெற்று முடிந்திருக்கும் இரண்டு போட்டிகளில் முதல் பேட்டிங், சேஸிங் அணிகள் என இரண்டும் வெற்றி பெற்றுள்ளன. இரண்டு ஆட்டங்களும் குறைவான ஸ்கோர் போட்டியாகவே உள்ளது. அந்த வகையில் இன்றைய போட்டியும் குறைவான ஸ்கோர் த்ரில்லராக இருக்கும் என நம்பலாம்.
வானிலை பொறுத்தவரை வறண்ட வானிலை நிலவும் எனவும் பகல் நேரத்தில் 30 டிகிரிக்கு மேலும், இரவில் 20 வரை குறையவும் வாய்ப்புள்ளது. பனிப்பொலிவு இருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது
உலகக் கோப்பை போட்டிகளில் இதுவரை இந்தியா - தென் ஆப்பரிக்கா அணிகள் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் தென்ஆப்பரிக்கா 3, இந்தியா 2 முறை வென்றுள்ளது. இந்த வெற்றி வித்தியாசத்தை சமன்படுத்த இந்திய முயற்சிக்கும் என எதிர்பார்க்கலாம்.
டாபிக்ஸ்