BAN vs AFG 3rd Match Result: ஆப்கனை பந்தாடி வெற்றியுடன் தொடங்கியது வங்கதேசம்-பந்துவீச்சில் மிரட்டிய ஷாகிப்
Oct 07, 2023, 04:44 PM IST
Cricket World Cup 2023: வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன், பந்துவீச்சில் மிரட்டினார். அவர் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
உலகக் கோப்பை 2023 தொடரை வெற்றியுடன் தொடங்கியது வங்கதேசம். தனது முதல் ஆட்டத்தில் ஆப்கனை இன்று தர்மசாலாவில் எதிர்கொண்டது.
வங்கதேசம் டாஸ் ஜெயித்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் விளையாடிய ஆப்கன், 37.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 156 ரன்களில் சுருண்டது.
157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம், 34.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 2023 உலகக் கோப்பை வெற்றியுடன் தொடங்கியுள்ளது வங்கதேசம்.
அடுத்து வங்கதேசம், இங்கிலாந்து அணியை 10ம் தேதி இதே தர்மசாலா மைதானத்தில் எதிர்கொள்கிறது. ஆப்கானிஸ்தான், இந்திய அணியை 11ம் தேதி டெல்லி மைதானத்தில் எதிர்கொள்கிறது.
ஆப்கன் அணியில் அதிகபட்சமாக ஓபனிங் பேட்ஸ்மேன் குர்பாஸ் 47 ரன்கள் விளாசினார்.
மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். வங்கதேச அணியைப்ப பொறுத்தவரையில் கேப்டன் ஷாகிப், மெஹிடி ஹசன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஷோஃரிஃபுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
வங்கதேசம் தரப்பில் மெஹிடி, நஜ்முல் ஆகியோர் அரை சதம் பதிவு செய்து அசத்தினர்.
கேப்டன் ஷாகிப் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவ்வாறாக அந்த அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கனை ஜெயித்தது.
முன்னதாக, உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5ம் தேதி தொடங்கியது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தியது நியூசிலாந்து. அதைத் தொடர்ந்து, 2வது ஆட்டத்தில் நெதர்லாந்தை ஜெயித்தது பாகிஸ்தான்.
2019 நடப்பு சாம்பியனான இங்கிலாந்து உட்பட 10 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. 1987, 1996 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் இந்திய துணைக்கண்டத்தில் உள்ள பிற நாடுகளுடன் இணைந்து இந்த போட்டியை நடத்திய இந்தியா, இம்முறை முழுமையாக தனித்து நடத்தும் முதல் ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பை இதுவாகும். இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நவம்பர் 19, 2023 அன்று நடைபெற உள்ளது.
டாபிக்ஸ்