IND vs AUS 1st T20: அணிக்கு திரும்பிய அக்ஷர் படேல்! டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு
Nov 23, 2023, 06:57 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. உலகக் கோப்பை 2023 தொடரில் தேர்வாகி விளையாடாத பிரசித் கிருஷ்ணா, காயத்தால் விலகிய அக்ஷர் படேலும் இன்று இந்திய அணியில் களமிறங்குகிறார்கள்.
உலகக் கோப்பை 2023 தொடர் முடிந்து மூன்று நாள்கள் ஆகியிருக்கும் நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்கியுள்ளது. முதல் போட்டி ஆந்திரா மாநிலம் விசாகபட்டினத்தில் உள்ள ஒய்எஸ் ராஜசேகரரெட்டி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த தொடரில் மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா உள்பட உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இந்த தொடரில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்தியாவை போல் ஆஸ்திரேலியா அணியிலும் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மேத்யூ வேட் தலைமை தாங்குகிறார்.
இதையடுத்து இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். உலகக் கோப்பை 2023 தொடரில் தேர்வாகி பின்னர் காயத்தால் விலகிய அக்ஷர் படேல் இன்றைய போட்டியில் களமிறங்குகிறார். அதேபோல், உலகக் கோப்பை தொடரில் காயமடைந்த பாண்ட்யாவுக்கு மாற்று வீரராக சேர்க்கப்பட்ட பிரசித் கிருஷ்ணாவும் இன்றைய போட்டியில் களமிறங்குகிறார்.
ஆஸ்திரேலியா அணியில் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றவர்களில் ஸ்டீவ் ஸ்மித், ட்ராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ், இங்கிலீஸ், சீன் அபாட் ஆகியோர் இன்றைய போட்டியில் விளையாடுகிறார்கள்.
இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் விவரம்
இந்தியா: ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ரிங்கு சிங், அக்ஷர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா
ஆஸ்திரேலியா: ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ ஷார்ட், ஜோஷ் இங்கிலிஸ், ஆரோன் ஹார்டை, மார்கஸ் ஸ்டோய்னிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), சீன் அபாட், நாதன் எல்லிஸ், ஜேசன் பெக்ரன்டார்ப், தன்வீர் சங்கா
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்