Parimala Ranganathar Temple: முன்னோர்கள் பாவத்தையும் விலக்கி வைக்கும் பரிமளரங்கநாதர் கோயில்
Oct 31, 2023, 05:08 PM IST
ஒருவரின் பாவம், அவரது குடும்பத்தினர் பாவம், முன்னோர்கள் செய்த பாவம் அனைத்தையும் விலக்கி கொள்ளும் வழிபாட்டு தலமாக பரிமளரங்கநாதர் கோயில் உள்ளது.
ஆழ்வார்கள் பாடிய 108 வைணவ திருத்தலங்களுள் ஒன்றாக மயிலாடுதுறை அருகே அமைந்திருக்கிறது திருஇந்தளுர் பரிமளரங்கநாதர் கோயில். இந்த திருக்கோயில் பஞ்சரங்கதலங்களில்ள ஒன்றாக உள்ளது. வைணவ தலங்களில் ஐந்து அரங்கங்கள் மிகவும் தொன்மை வாய்ந்த இந்த கோயில் ஏகாதசி விரதத்துக்கு உரிய தலமாக உள்ளது.
சமீபத்திய புகைப்படம்
பிரம்மா, எமன், சூரியன், சந்திரன் வழிபட்ட இந்த கோயிலில் சென்று விரதம் இருந்தால் விரும்பியது நிறைவேறும் என்பது ஐதீகம்.
ஒருகாலத்தில் இந்தப் பகுதியை அம்பரீசன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். தொடர்ந்து ஏகாதசி விரதம் இருந்து வந்த அவன், நூறாவது ஏகாதசி விரதத்தை மேற்கொண்டபோது தேவர்களுக்கு பெரும் கவலையை அளித்தது.
தனது நூறாவது விரதத்தை அம்பரீசன் வெற்றிகரமாக முடித்து விட்டால் தேவலோக பதவி அவனுக்கு கிடைத்துவிடும். இதை எண்ணிய தேவேந்திரன் உள்பட தேவர்கள் துர்வாசன் என்ற முனிவரிடம் அம்ரீசன் விரதத்தை முடித்துவிடக்கூடாது என முறையிட்டனர்.
அம்ரீசனின் விரதத்தை துர்வாசன் தடுப்பதற்கு முன்னரே அவன் விரதத்தை முடித்துள்ளான். ஏகாதசி விரதத்தின் பலன் முழுமையாக கிடைக்க துவாதசி நேரத்தில் உணவு சாப்பிட்டாக வேண்டும். அம்ரீசன் சாப்பிட அமர்ந்த நேரத்தில் உள்ல நுழைந்த முனிவரை அவர் சாப்பிட அழைத்தார். நீராடி விட்டு வருவதாக கூறி சென்ற முனிவர், துவாசி நேரம் முடியும் வரை செல்லக்கூடாது என முடிவெடுத்து வராமல் இருந்தார்.
முனிவர் வரத் தாமதமானதால் மன்னன், வேதியர்களுடன் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தான். துவாதசி விரதம் முடிய சில நிமிடங்களே இருந்த நிலையில், உள்ளங்கை அளவு தீர்த்தத்தை எடுத்து, அதை மூன்று முறை அருந்தினான். இந்த வகையில் அவன் ஏகாதசி விரதத்தை முழுமையாக நிறைவு செய்தான்.
இதை அறிந்த துர்வாச முனிவர் கோபத்துடன் ஒரு பூதத்தை வரவழைத்து அம்பரீசனை கொல்ல ஆணையிட்டார். இதனால் அம்பரீசன், பரிமள ரங்கநாதரை சரணடைந்தான். பெருமாள் மிகுந்த கோபத்துடன் பூதத்தை விரட்டினார். இதையடுத்து துர்வாச முனிவர், பெருமாளை பணிந்து மன்னித்து அருள வேண்டினார். பெருமாளும் அவரை மன்னித்தார்.
நூறு ஏகாதசி விரதத்தை நிறைவு செய்த அம்பரீசனிடம், விரும்பியதை கேள் என்று பெருமாள் சொன்னார். அதற்கு அம்பரீசன், தாங்கள் இத்தலத்தில் வீற்றிருந்து பக்தர் பக்தர்களின் குறைகளைக் கேட்டு அருள்புரிய வேண்டும்" என்று வேண்டினான். இதுதான் இந்த கோயிலின் தல வரலாறாக உள்ளது.
சந்திரன் இக்கோவில் தாயாரான புண்டரிக வல்லியிடம் தன் பாவத்தைப் போக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ள, பெருமாளும், தாயாரும் சேர்ந்து சந்திரனின் மனக்குறையை போக்கியதாக சொல்கிறார்கள். இதனால் இத்தலத்தில் உள்ள தாயாருக்கு சந்திர பாப விமோசன வல்லி என்ற பெயர் ஏற்பட்டது. ஒருவரின் பாவம், அவரது குடும்பத்தினர் பாவம், முன்னோர்கள் செய்த பாவம் அனைத்தையும் இத்தலத்தில் வழிபட்டு விலக்கி கொள்ள முடியும் என்று தல புராணம் சொல்கிறது.
பெண் மீதாந ஆசையால் தவறு செய்தவர்கள், பெண்கள் சாபத்துக்கு ஆளானவர்கள், பெண் குழந்தை வேண்டுபவர்கள் இந்த ஆலயம் வந்து வழிபாடு செய்தால், அவர்களின் வேண்டுதல் நிறைவேறும். ஏகாதாசி நாளில் இந்த கோயில் வந்து விரதம் இருந்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என நம்பப்படுவதால், ஏராளமான பக்தர்கள் விரதம் இருக்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவுடன் பெருமாளை துளசியால் அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர்.
டாபிக்ஸ்