தை மாதத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விரதங்கள்
Jan 17, 2023, 11:26 PM IST
தை மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விரதங்கள் குறித்து இங்கு காணலாம்.
சூரியனின் தேர்ப்பாதை வடதிசையில் மாறும் உத்தராயண காலத்தின் ஆரம்பமே தை மாத முதல் நாள். இது மிகவும் புண்ணியமான காலம் என்று புராணங்கள் சொல்கின்றன. உயர்வான இந்த மாதத்தில் பல தலங்களில் சிறப்பான பூஜைகள் நடைபெற்றன.
சமீபத்திய புகைப்படம்
தை மாதத்தில் மக்கள் தைப்பூசம், தை அமாவாசை, ரத சப்தமி போன்ற விழாக்களையும், பைரவ வழிபாடு, வீரபத்திரர் வழிபாடு, தை வெள்ளி வழிபாடு போன்ற வழிபாட்டு முறைகளையும் இம்மாதத்தில் பின்பற்றுகின்றனர். தைக்கிருத்திகை முருகப்பெருமானுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது.
ஜனவரி 30-ம்தேதி தைக்கிருத்திகை அனுஷ்டிக்கப்படுகிறது. சஷ்டி விரதம் சக்தி வாய்ந்தது. அதுபோல 27 நட்சத்திரங்களில் கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது.
கார்த்திகைப் பெண்களை சிறப்பிக்கும் வண்ணம் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது. ஆண்டுக்கு மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை, உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை.
தை மாதத்தில் வரும் கிருத்திகையில் விரதமிருந்து முருகப்பெருமானை வணங்கி வழிபாடு செய்தால் நிச்சயம் திருமணத்தடை நீங்கம் என்பது ஐதீகம். புத்திரபாக்கியம் கிடைக்கும்.
சித்திரை முதலாகத் தொடங்கும் பன்னிரு மாதங்களில் பத்தாவது மாதமாக வருவது தை மாதம். பத்து மாதம் கருவுற்று, பிள்ளைச் செல்வம் பெற வேண்டிய பெண்மணிகள், பத்தாவது மாதமான தை கிருத்திகையில் முருகனை மனமார நினைத்து விரதம் இருந்துவழிபட்டால், அவர்களின் மூடிய கருப்பை திறக்கும் கட்டாயம் குழந்தையும் பிறக்கும் என்பது நம்பிக்கை.
இந்த தைக் கிருத்திகை தினத்தில் விரதமிருந்து கந்தவேளை வணங்க அனைத்து கவலைகள், பிரச்சனைகள், தொல்லைகள், தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் சேரும். தை மாதம் வளர்பிறை ஏகாதசி புத்திரத ஏகாதசியாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு சந்தான பாக்கியம் கிடைக்கும். நல்ல புத்திரர்கள் கிடைப்பார்கள்.
இந்த ஆண்டு தைப்பூசம் பிப்ரவரி 4-ம் தேதி கொண்டாடப்படுகிறது. தை மாதத்தில் வரும் பௌர்ணமியோடு கூடிய பூசம் நட்சத்திரத்தில் சிவபெருமான், முருகனை வழிபடுவது சிறப்பு. சிதம்பரம் பொன்னம்பலத்தில் இறைவன் ஆடலரசனாக உலக மக்களுக்கு காட்சியருளிய நாள் தைப்பூசம் என்றும், உமையம்மை வேலவனுக்கு சக்தி வேலை வழங்கிய நாள் தைப்பூசம் என்றும் கருதப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. இவ்விழா உலகெங்கும் உள்ள தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
தை அமாவாசை இந்த ஆண்டு தை அமாவாசை ஜனவரி 21-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. தை அமாவாசை அன்று மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் எனப்படும் நீத்தார் கடன் வழிபாட்டினை மேற்கொள்கின்றனர்.
ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளில் இவ்வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. உத்திராண்ய காலத்தின் முதல் மாதமான தை மாத அமாவாசையும், தட்சியாண காலத்தின் முதல் மாதமான ஆடி மாத அமாவாசையும், புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசையும் முன்னோர்களுக்கான வழிபாட்டிற்கு உகந்தவை எனக் கருதப்படுகின்றன.
இந்த வழிபாட்டின் மூலம் தாங்கள் செய்த பாவங்கள் நீங்குவதாகவும், குழந்தைப்பேறு, குடும்பத்தில் ஒற்றுமை, சுபிட்சம், மகிழ்ச்சி போன்றவை கிடைப்பதாகவும் கருதப்படுகிறது. வீரபத்ர வழிபாடு என்பது செவ்வாய் தோறும் ஓராண்டு காலம் கடைபிடிக்கப்படுகிறது. ஓராண்டு வழிபட முடியாதவர்கள் தை மாத செவ்வாய்க்கிழமையில் மட்டுமாவது இவ்வழிபாட்டினை கடைபிடிக்கலாம். இவ்வழிபாட்டை மேற்கொள்வதால் நீங்காத தடையும் நீங்கும்.
தீராத பகையும் தீரூம். நவகிரக பாதிப்புகளிலிருந்து நம்மைக் காக்கும். உத்தராயண காலத்தின் ஆரம்ப மாதமான தை மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையில் அம்மன் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அன்றைய தினங்களில் அபிராமி அந்தாதி, சௌந்தர்ய லஹரி உள்ளிட்ட அம்மன் குறித்த பாடல்களைப் பாடி வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.
ஸ்ரீசரஸ்வதி அவதரித்த தினமே வசந்த பஞ்சமி. அந்த நாள் தை மாதத்தில் வரும் சுக்ல பஞ்சமியாகும். இதனை மகாபஞ்சமியாகவும் கடைபிடிக்கின்றனர். ஸ்ரீசரஸ்வதி தேவிக்கு வசந்த பஞ்சமி தினத்தில் பூஜைகள் செய்து வழிபாடு செய்வதால், ஞான சித்தியாகும். அக்ஷராப்பியாசத்திற்கும் கல்வி சம்பந்தமான புதிய முயற்சிகள் துவங்கவும் ஏற்ற தினம் இது. ஸ்ரீகிருஷ்ணர், சாந்தீபனி முனிவரிடம் குருகுல வாசம் துவங்கிய நாளும் இன்று தான்.
மேற்கு வங்கத்தில் இந்த வசந்த பஞ்சமி நாள் அன்றுதான் வித்யாரம்பம் செய்கிறார்கள். இந்த ஆண்டு ஜனவரி 26-ம் தேதி வசந்த பஞ்சமி கடைபிடிக்கப்படுகிறது. ரத சப்தமி என்பது தை மாதத்தின் வளர்பிறையில் வரும் சப்தமி திதி அன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில்தான் சூரியன் தனது வடஅரைக்கோளப் பயணத்தைத் தொடங்குகிறார்.
இந்நாளில் விரதம் மேற்கொள்வதால் ஆரோக்கியம், நோய் இல்லாமை, செல்வம், புத்திரப்பேறு, நீண்ட ஆயுள், பகைவர்களை வெல்லும் சக்தி, வெற்றி, நிலம், தானியம், புண்ணியம் ஆகியவை கிடைக்கும். மேலும் மனக்கவலை, வியாதி ஆகியவற்றை நீக்கும். வழியில்லாமல் தவிக்கும்போது வழி காட்டும் என்றும் கருதப்படுகிறது. ரத சப்தமி அன்று சந்திரசேகர சுவாமி ரதத்தில் எழுந்தருளி, மேலண்டைக் குளக்கரையில் தீர்த்தவாரியும், பின்னர் திருவீதி உற்சவமும் நடைபெறும்.
தை மாத வெள்ளிக்கிழமைகளில் கற்பகாம்பாள் பிராகார உலா நடைபெறும். இந்த ஆண்டு ரத சப்தமி ஜனவரி 28-ம்தேதி வருகிறது. ரதசப்தமிக்கு அடுத்த நாள் அஷ்டமி திதி. இந்த அஷ்டமி திதியை பீஷ்மாஷ்டமியாக கடைபிடிக்கப்படுகிறது. 58 நாட்கள் அம்புபடுக்கையில் படுத்து இருந்த பிதாமகர் பீஷ்மர் பரமாத்மாவின் கடாக்ஷத்தால் ஸ்ரீ வைகுண்ட ப்ராப்தி அடைந்த நாள்.வேதம் படிக்கும் படித்த வித்யார்த்திகள் அனைவரும் மந்திர ரூபமாக பிதாமகருக்கு தர்ப்பணம் செய்வது மிகுந்த பாக்கியத்தை கொடுக்கும். தவிர மற்றவர்கள் யார் வேண்டுமானாலும் பிதாமகருக்கு தர்ப்பணம் செய்யலாம்.
அன்று புனிதநீர் நிலைக்குச் சென்று பீஷ்மருக்கான தர்ப்பணமும் நம்மில் வாழ்ந்த முன்னோர்களுக்காக பிதுர் பூஜையும் செய்தால், சுகமான வாழ்வு நிரந்தரமாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை!