சிவனுக்கு தோஷம் போக்கிய ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி!
Aug 25, 2022, 07:30 PM IST
மேல்மலையனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அறிக்கை மேல்மலையனூரில் அமைந்துள்ளது ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோயில். சிவனுக்கும் பிரம்மனுக்கும் ஐந்து தலைகள் இருந்தனவாம். இதனால் பிரம்மனின் ஆணவத்தை அடக்கும் விதமாகப் பிரம்மனின் ஐந்தாம் தலையை வெட்டியதில் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது.
சமீபத்திய புகைப்படம்
அவர் கையில் உள்ள ஐந்தாம் தலை நீங்கும் வரை பிரம்மஹத்தி தோஷம் தொடரும் எனச் சாபம் பெற்றார். கையில் மண்டையோடு சூலாயுதம் என உடலெங்கும் சாம்பலைப் பூசிக்கொண்டு அலைந்த சிவனார். மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மனிடம் வந்தார்.
அங்காள பரமேஸ்வரி அம்மன் கபாலத்திற்கு உணவிட முற்பட்டு சாதத்தைக் கீழே சிதறிப் போகும் படி செய்தார். அப்பொழுது சிவன் கையிலிருந்த கபாலம் கீழே இறங்கி சாதத்தை பொறுக்கியது. உடனே அங்காள பரமேஸ்வரி அம்மன் விஸ்வரூபம் எடுத்து கபாலத்தை காலால் மிதித்து அதை அடக்கினார்.
அப்பொழுது சிவனைப் பிடித்து இருந்த பிரம்மஹத்தி தோஷம் விலகியதாகத் தல வரலாறு கூறுகின்றது. இச்சாசக்தி, ஞான சக்தியாக விளங்கும் அங்காள பரமே ஸ்வரி அமர்ந்த இடம் மலையனூர். சிவபெருமான் ஒரு முறை ரிஷப வாகனத்திலிருந்த பார்வதி தேவியைப் பார்த்து என்ன வரம் வேண்டும் கேள் என்ற போது, தங்களது அங்கத்தின் இடது பாகத்தை எனக்குத் தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
அதன்படி தனது இடது பாகத்திற்கு வந்ததினால் ஆதி சக்தியாம் ஈஸ்வரிக்கு அங்காள பரமேஸ்வரி என்ற திருநாமம் ஏற்பட்டது. கோயிலில் மல்லாந்து படுத்த நிலையில் பெரிய நாயகி எனத் திருநாமம் பெற்று விளங்கும் அன்னை, பேய், பிசாசு மற்றும் தீய வினைகளைத் தீர்த்து வைக்கிறார் என்பது ஐதீகம்.
அன்னையை ஊஞ்சலில் அமர வைத்து அவர் புகழை பாடுவதற்காகவே ஒரு தனி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. மாசி மாதம் சிவராத்திரி தினத்தன்று கொடியேற்றத்துடன் தொடங்கி மறுநாள் அமாவாசை அன்று அன்னை அங்காள பரமேஸ்வரி கடை மூடியுடன் கபால மாலை தாங்கி செம்பு வாகனத்தில் சுடுகாட்டிற்குச் செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
ஏழாம் நாள் அன்று திருத்தேர் உற்சவம் நடைபெறுகின்றது. சிவனைப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய பின்னர் அவரை அமரச் செய்து தேர்ப்பவனி வரச் செய்தார்கள். இதனால் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரியின் கோபம் முழுவதுமாக சாந்தமாகும் வகையில் அங்கேயே அமர்ந்து உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் அருள்பாலிக்கத் தொடங்கினார்.
மகா சிவராத்திரிக்கு மறுநாள் மாசி அமாவாசையாகும். அன்றைய தினத்தில் அனைத்து அங்காளம்மன் ஆலயத்திலும் மயானக் கொள்ளை நிகழ்ச்சி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.