Somanatha Swamy: பழங்கால கலை பொக்கிஷம் சோமநாதசுவாமி திருக்கோயில்!
Nov 27, 2022, 06:42 PM IST
களக்காடு சோமநாதசுவாமி சமேத கோமதி அம்பாள் திருக்கோயில் குறித்து இங்கே காண்போம்.
நெல்லை மாவட்டம் களக்காடு சிங்கிகுளம் பச்சையாற்றின் கரையில் அமைந்துள்ளது சோமநாத சுவாமி சமேத கோமதி அம்மாள் திருக்கோயில். 1500 ஆண்டுகளுக்கு முன்னதாக கருதப்படும் சிவதலமான சோமநாத சுவாமி கோயில் பழங்கால கலை பொக்கிஷம் என்றால் அது மிகையாகாது.
சமீபத்திய புகைப்படம்
ஆன்மீகம் மற்றும் கலைகளின் கருவூலமாக திகழும் இந்த கோயிலில் ஆடல் வல்லான் எம்பெருமான் சோமநாத சுவாமியாகவும் பக்திக்கு இறங்கும் பார்வதி தேவியோ கோமதி அம்பாளாகவும் அருள்பாலித்து வருகின்றனர்.
முன்பு ஒரு காலத்தில் களக்காட்டில் தலைநகராகக் கொண்ட வீரமார்த்தாண்ட மன்னர் ஆட்சி செய்து வந்த சமயத்தில் அவரது வம்சத்தில் வந்த மன்னர் ஒருவர் வேட்டையாடுவதற்காக இப்பகுதிக்கு வந்த போது அங்கிருந்த இலந்தை மரத்தின் அடியில் முயல் இருப்பதை பதுங்கி இருப்பதைக் கண்டு அதனை பிடிப்பதற்காக மரத்தை வெட்ட சொன்னாராம்.
மரத்தை வெட்ட தொடங்கியதும் மரத்தில் இருந்து ரத்தம் கொப்பளித்து வர அதிர்ச்சி அடைந்த மன்னரோ மரத்தின் கீழ் மண்ணைத் தோண்டி பார்த்த போது மண்ணுக்குள் இருந்து சிவலிங்கம் வெளிப்பட்டது. இதைக்கண்டு மெய்சிலிர்ந்த மன்னர் அந்த சிவலிங்கத்தை அங்கேயே பிரதிஷ்டை செய்து காண்போர் வியக்கும் வண்ணம் இந்த கோயிலை கட்டியதாக கூறப்படுகிறது.
இலந்தை மரத்தின் அடியில் சிவனார் தென்பட்டதால் இக்கோயிலின் தல விருட்சமாக இலந்தை விளங்குகின்றது. சோமநாத சுவாமி நோக்கியவாறு நந்தியம்பெருமான் காட்சி தருகிறார். கோயில் நுழைவு வாயில் தென் பக்கம் முழு முதல் கடவுளான விநாயகர், ஆறுமுகப்பெருமான் தனது இரு தேவிகளுடன் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
கோயிலில் உட்பிரகாரத்தில் தக்ஷிணாமூர்த்தி, கன்னி விநாயகர், சொக்கநாதர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், சண்டிகேஸ்வரர், சூரியன், சந்திரனார், சனீஸ்வரர், பைரவர், பரிவார மூர்த்திகளும் சன்னதி கொண்டுள்ளனர்.
இந்த கோயிலில் சுவாமியையும் அம்பாளையும் ஒரே நேரத்தில் நின்று தரிசனம் செய்யும் வகையில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. ஆருத்ரா தரிசன விழா, திருக்கார்த்திகை தீப விழா, திருக்கல்யாண விழாக்கள், திருவாசகம் முற்றோறுதல் விழா, பிரதோஷ விழா விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது