சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையின் முக்கியத்துவம் என்ன?.. வழிபட உகந்த நேரம் எது ? - முழு விபரம் இதோ..!
Oct 10, 2024, 08:43 PM IST
நாடு முழுவதும் நாளை (அக்.11) சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு பூஜை செய்ய உகந்த நேரம் எதுவென்று தெரிந்துகொள்ளலாம்.
நவராத்திரி பண்டிகையின் 9ஆவது நாளில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுவது வழக்கம். உடல் வலிமையின் சக்தியாக விளங்கும் துர்கா தேவியையும், செல்வத்தை அள்ளித்தரும் சக்தியாக மகாலட்சுமியையும், அறிவை தரும் கல்வியின் தேவதையாக சரஸ்வதி தேவியையும் வழிபட்டு அந்த தேவியரின் அருள் பெற்று கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றினையும் பெறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட பண்டிகையே நவராத்திரி ஆகும்.
சமீபத்திய புகைப்படம்
முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிக்கும், அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரியவை. 10வது நாள் மூன்று தேவியரும் சேர்ந்து பராசக்தியாக தோன்றி மகிஷ்சாசுர அரக்கனை வதம் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன. நவராத்திரியின் ஒன்பது நாட்களை அடுத்து ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி கொண்டாடப்படுகிறது.
அந்தவகையில், நாளைய தினம் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. ஆயுத பூஜையையொட்டி வீடுகள், கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தி கொண்டாடப்படும். கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியையும், நாம் செய்யும் தொழிலுக்கு துணை புரியும் கருவிகளையுடம் பூஜை செய்து வணங்கும் நாளே சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நாளாகும்.
கல்விக்கு உதவும் சரஸ்வதியை வழிபடும் வகையில், சரஸ்வதி பூஜையான நாளை (அக்.11) வீடுகளிலும், அலுவலகங்களிலும் பூஜைகள் செய்து வழிபாடு நடத்துவர். அதிகாலையில் எழுந்து நீராடி, பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள பூஜையறையைக் கழுவிக் கோலமிட்டு அலங்கரித்து சரஸ்வதியின் படத்துக்கு பூக்களால் அலங்காரம் செய்வது வழக்கம்.
சரஸ்வதியின் திருவுருவின் பார்வையில் குழந்தைகளின் புத்தகங்களை வைத்து அதன் முன்பாக வாழை இலை விரித்து அதில் சுண்டல், சர்க்கரை பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம், பொறி, கடலை, அவல், நாட்டு சர்க்கரை, பழங்கள் போன்றவற்றை நைவேத்தியங்களாக படைத்து வழிபடுகின்றனர்.
இதேபோல, வர்த்தக நிறுவனங்கள், ஆட்டோ மொபைல் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. தங்கள் தொழிலுக்கு உதவியாக இருக்கும் கருவிகளை அலங்கரித்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையின் போது வழிபட உகந்த நேரம் எதுவென்று தெரிந்துகொள்ளலாம்.
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம்:
நாளை 11.10.2024 - வெள்ளிக்கிழமை
காலை 06 - 7:30
காலை 09 - 10:30
பிற்பகல் 12 - 1:30
மாலை 4:30 - 6:00
மாலை 6:00 - 7:30
குழந்தைகளுக்கு அக்ஷரப்யாகசம் பூஜை செய்ய உகந்த நேரம்:
காலை 7:30 - 9:00
காலை 10:30 - 12:00
பிற்பகல் 12:00 - 1:30
மாலை 1:30 - 3:00
மாலை 4:30 - 6:00
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்