Aadi Perukku 2023: செல்வம் பெருக ஆடிப்பெருக்கின் போது எப்படி வழிபட வேண்டும்?
Jul 30, 2023, 03:16 PM IST
ஆடிப் பெருக்கு தினத்தன்று விரதமிருந்து அம்மனை வழிபட்டால் 16 வகையான செல்வங்களும் நம்முடைய வாழ்வில் குறைவின்றி பெருகி வரும் என்பது ஐதீகம்.
பல நூற்றாண்டுகளாக தமிழகத்தில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடி மாதத்தில் வரும் மிகச் சிறப்புடைய நாளாக இந்த விழா கருதப்படுகிறது. குறிப்பாக, காவிரி பாயும் பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாகவும் குதூகலத்துடனும் கொண்டாடப்பட்டுவந்த நிலையில், தற்போது ஒட்டுமொத்த தமிழகம் முழுவதிலும் எல்லாத் தரப்பு மக்களாலும் கொண்டாடும் விழாவாக மாறியிருக்கிறது.
சமீபத்திய புகைப்படம்
பெருக்கு என்றால் பெருகுவது என்று அர்த்தம். ஆடிப்பெருக்கு அன்று எதை வாங்கினாலும் அது பன்மடங்காக பெருகும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கையாக இருக்கிறது. குறிப்பாக ஆடிப்பெருக்கில் சுமங்கலி பெண்கள் தாலி கயிறு மாற்றுவது சிறப்பான அம்சமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆடிப்பெருக்கு அன்று காலையில் எழுந்து குளித்து முடித்து பூ, மஞ்சள், குங்குமம், வளையல், காதோலை கருகமணி, அரிசி, வெல்லம் என்று மங்கலப் பொருட்களோடு நீர்நிலைகளுக்கு சென்று நீராடி இறைவனை வழிபடுவது வழக்கம்.
மேலும் மங்களப் பொருட்களை நீரில் விட்டு அம்பாளை பூஜிப்பதும் விசேஷமாக இருக்கிறது. இந்தாண்டு ஆடிப்பெருக்கு வருகின்ற (ஆகஸ்ட் 3, 2023) வியாழன்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினம் இந்த விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆடிப்பெருக்கு அன்று முதலில் வீட்டில் பூஜை செய்பவர்கள் மஞ்சளில் பிள்ளையார் செய்து வைக்க மறக்க கூடாது.
எந்த ஒரு நல்ல காரியத்தை செய்யும் பொழுது மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து அதற்கு முதல் வழிபாட்டை முடித்துவிட்டு துவங்குவது ஆகச்சிறந்ததாகும். பிள்ளையாருக்கு விளக்கேற்றி விட்டு பின்பு அம்பாளுக்கு வேப்பிலை மாலை சாற்றி நெய்வேத்தியம் படைத்து வழிபடுங்கள். ஆடிப்பெருக்கில் தாலி கயிறு மாற்றுவது மாங்கல்ய பலத்தை அதிகரிக்க செய்யும் எனவே தாலி சரடு அணிந்து இருந்தாலும், கயிறு அணிந்திருந்தாலும் சரட்டில் சிறு மஞ்சள் கயிறாவது இருப்பது நல்லது
வியாழக்கிழமை என்பதால் அன்று காலை 10.45 முதல் 11.45 வரை மட்டுமே நல்ல நேரம் உள்ளது. மாலையில் நல்ல நேரம் கிடையாது. காலை 6 முதல் 7.30 வரை எமகண்டமும், பகல் 01.30 முதல் 3 வரை ராகு காலமும் உள்ளது. இதனால் காலை 07.35 மணிக்கு மேல் வழிபாட்டினை துவங்கி, பகல் 01.15 மணிக்கு முன்னதாக முடித்து விடுவது நல்லது. அதேபோல், பெண்கள் இந்த நேரத்திற்குள் நீங்கள் தாலி கயிற்றை மாற்றி விட வேண்டும். நல்ல நேரம் பார்க்காமல் கயிறு மாற்றக்கூடாது.
நீர்நிலைகளுக்கு சென்று வழிபட முடியாதவர்கள் வீட்டிலேயே அம்மனுக்கு சர்க்கரை பொங்கல் படைத்து வழிபடலாம். வேப்பிலை மாலை சாற்றி வழிபடலாம். ஆடிப் பெருக்கு தினத்தன்று விரதமிருந்து அம்மனை வழிபட்டால் 16 வகையான செல்வங்களும் நம்முடைய வாழ்வில் குறைவின்றி பெருகி வரும் என்பது ஐதீகம்.
டாபிக்ஸ்